கனடா முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களுக்கு எதிரான தீவிர அதிரடி நடவடிக்கையின் கீழ், இதுவரை 111 வெளிநாட்டுப் பிரஜைகளை கனடிய எல்லை சேவைகள் முகமையகம் (CBSA) நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் எடுக்கப்பட்டு வரும் மிக முக்கிய நகர்வாக இது நோக்கப்படுகிறது.
பல்வேறு மாகாணங்களில் உள்ள வணிகர்கள், பொதுமக்களை குறி வைத்து, துப்பாக்கிச்சூடு நடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பல்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளில் British Colombia மாகாணம் உள்ளடங்கிய Pacific பிராந்தியத்தில் இருந்து அதிகப்படியானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து 91 பேருக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 58 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
Alberta , Manitoba, Saskatchewan ஆகிய மாகாணங்களில் இருந்து 47 பேருக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 30 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
Ontario மாகாணத்தில் இருந்து 50 பேருக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 23 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த August 2025-ல் மேற்கு கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்புக் கூட்டு நடவடிக்கை, பின்னர் நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கடந்த November மாதம் Ontario மாகாணத்தின் Toronto பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதில் நாடு கடத்தப்பட்டவர்களில் பலர் தற்காலிக visa, காலாவதியான மாணவர் visa அல்லது வேலை அனுமதிப் பத்திரங்கள் மூலம் கனடாவில் தங்கியிருந்து, உள்ளூர் குற்றவியல், நிழல் உலக கும்பல்களால் இத்தகைய மிரட்டல், துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சர்வதேச கும்பல்களை ஒடுக்குவதற்கு Liberal அரசாங்கம் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக British Colombia, Ontario மாகாணங்களில் உள்ள தெற்காசிய சமூகத்தினரை இந்தக் கும்பல்கள் முதன்மையாகக் குறிவைத்து அச்சுறுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
