போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனை மறுசீரமைக்க கனடா முழுமையாக உதவும் என பிரதமர் Mark Carney உறுதியளித்துள்ளார்.
கனடாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky, கனடிய பிரதமர் Mark Carney ஆகியோர் வியாழக்கிழமை (10) சந்தித்துப் பேசியுள்ளனர்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் பதட்டங்களுக்கு மத்தியில், உக்ரைன் ஜனாதிபதியைத் தனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக பிரதமர் Mark Carney வரவேற்றார்.
ரஷ்யாவுடனான போரினால் உக்ரைன் சந்தித்துள்ள பொருளாதார , உட்கட்டமைப்பு சேதங்களில் இருந்து அந்நாட்டை மீட்டெடுக்கக் கனடா நீண்ட கால அடிப்படையில் உதவும் என பிரதமர் Mark Carney உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்பு, இராணுவக் கூட்டாண்மையை தாண்டி, போருக்குப் பிந்தைய உக்ரைனின் பொருளாதார மறு மலர்ச்சிக்கு தேவையான நிதி உதவிகள், தொழில்நுட்ப உதவிகளை கனடா முன்னின்று வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே நூற்றாண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் ஆழமான வரலாற்றுப் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு அமைந்தது.
