Peel பிராந்தியத்தில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரணையில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விசாரணையில் Peel பிராந்தியத்திய காவல்துறையினர் $15,000 மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர்.
கடந்த June 18 அன்று Mississauga நகரில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் நடந்த திருட்டு குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இரண்டு நாட்களுக்குப் பின்னர் Brampton நகரில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, பல்வேறு கடைகளில் இருந்து திருடப்பட்ட சுமார் $15,000 மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டன.
இதில் மருந்தகங்கள், பலசரக்கு கடைகள், உடற்பயிற்சி கூடங்கள்இலக்கு வைக்கப்பட்டு இந்த திருட்டுகள் அரங்கேறியுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்களில் மின்னணு சாதனங்கள், உடல்நல, உடற்பயிற்சி பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள் ஆகியவை அடங்குகின்றன.
இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக Brampton பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது மொத்தம் 23 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் கைது செய்யப்பட்டவர்கள்:
Czuljana Ciecierska – 43 வயது
Dawid Ciecierski – 47 வயது
Dawid Ciecierski – 21 வயது
Danuta Towinska – 20 வயது
என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.
சில்லறை விற்பனை நிலையங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் இத்தகைய குற்றங்கள் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி போன்ற வன்முறை குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என Peel பிராந்திய காவல்துறை துணைத் தலைவர் Marc Andrews தெரிவித்தார்.
2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை சில்லறை திருட்டு தொடர்பாக 611 பேரை Peel பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பதும், அவர்கள் மீது 1,276 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
