Mark Carney அரசின் புதிய பற்றாக்குறை $65.3 பில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் Mark Carney புதிதாக அமைந்துள்ள பெரும்பான்மை அரசாங்கம் தனது முதலாவது வசந்த கால பொருளாதார அறிக்கையை சமர்ப்பித்தது.
நிதி அமைச்சர் François-Philippe Champagne மத்திய அரசாங்கத்தின் பொருளாதார அறிக்கையை புதன்கிழமை (28) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த பொருளாதார அறிக்கை Liberal அரசாங்கம் எதிர்பார்த்ததை விடச் சிறந்த நிலையில் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
François-Philippe Champagne முன்வைத்த கணிப்புகளின்படி, பற்றாக்குறையானது கடந்த November மாதம் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை விட $11.5 பில்லியன் குறைவாக உள்ளது.
இந்த பொருளாதார அறிக்கையில் $37.5 பில்லியன் நிகர புதிய செலவினம் அடங்கியுள்ளது.
திறமையான கைவினைஞர்களுக்காக பல பில்லியன் டொலர்களை செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அமைச்சர் François-Philippe Champagne புதன்கிழமை சமர்ப்பித்த பொருளாதார அறிக்கையின்படி, 2025-26 ஆம் ஆண்டுக்கான பற்றாக்குறை $66.9 பில்லியனாக உள்ளது.
இது November மாதம் அறிவிக்கப்பட்டதை விட $11.5 பில்லியன் குறைவானதாகும்.
2030-31-ஆம் ஆண்டுக்குள் பற்றாக்குறை சுமார் $53 பில்லியனாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mark Carney தலைமையின் கீழ் கடந்த November தாக்கல் செய்யப்பட்ட முதலாவது Liberal இலையுதிர் கால வரவு செலவுத் திட்டம், கடந்த நிதியாண்டில் $78.3 பில்லியன் பற்றாக்குறையை முன்னறிவித்தது.
வரும் ஐந்தாண்டு காலப்பகுதியில் பற்றாக்குறைகள் குறைந்து, ஆண்டுக்குச் சராசரியாக சுமார் $64 பில்லியனாக இருக்கும் எனவும் அதில் எதிர்வு கூறப்பட்டது.
பின்னர் 2029-30 இல் பற்றாக்குறை படிப்படியாக $57 பில்லியனாகக் குறையும் எனவும் எதிர்வு கூறப்பட்டது.
வசந்த கால பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட April 28, கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய பொதுத் தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெற்ற ஆண்டு நிறைவு நாளாகவும் விளங்குகின்றது.
அப்போது Mark Carney சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்திருந்தாலும், தற்போது அவர் பெரும்பான்மையைப் பெற்றுள்ளார்.
இதன் விளைவாக, வசந்த காலப் பொருளாதார அறிக்கை விரைவாக ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற மூன்று இடைத் தேர்தல்களில் Liberal கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (27) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றனர்.
இதன் மூலம் ஒரு முறையான பெரும்பான்மை அரசாங்கத்தை கொண்டுள்ள Mark Carney சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான கூடுதல் அதிகாரத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
