மத்திய கிழக்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கனடிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாடினார்.

ஞாயிற்றுக்கிழமை (08) பிற்பகல் Donald Trump-உடன் தொலைபேசியில் உரையாடியதாக Mark Carney உறுதிப்படுத்தினார்.

மத்திய கிழக்கில் தொடரும் யுத்தம் தவிர, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் உரையாடினர்.

இருவரும் தொடர்ந்தும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர் என்பதைத் தவிர, இந்த உரையாடலின் வேறு எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

February 28-ஆம் திகதி ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு Mark Carney ஆதரவு தெரிவித்த போது, தாங்கள் சங்கடமாக உணர்ந்ததாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.

இந்தத் தாக்குதல் குறித்த Liberal அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கொள்கையற்றது, பொருத்தமற்றது, முரண்பாடானது என இடைக்கால NDP தலைவர் Don Davies ஒரு சமூக ஊடகப் பதிவில் கடந்த வாரம் விமர்சித்திருந்தார்.

ஈரான் தாக்குதல் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இருக்கலாம் என Mark Carney தனது ஆதரவை “வருத்தத்துடன்” வெளிப்படுத்தி இருந்தார்

இந்த நிலையில் மத்திய கிழக்கு கொந்தளிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க Mark Carney அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

திங்கள்கிழமை (09) மாலை இந்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய கிழக்கின் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.