December 13, 2025
தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவதில் அரசாங்கத்தின் சவால்கள் என்ன?

ஒரு குறுகிய வசந்த கால கூட்டத்தொடர், கோடைகால விடுமுறைக்கு பின்னர் இந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளுக்குத் திரும்பினர். சிறுபான்மை Liberal அரசாங்கம் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டமூலங்களை நிறைவேற்ற சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கனடியர்கள் Liberal சிறுபான்மை அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆட்சியமைத்த ஆறாவது சிறுபான்மை அரசாங்கம் இதுவாகும். இதனால், இந்த அரசாங்கம் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவது அவசியமாகிறது.

கடந்த இலைதுளிர் கால அமர்வில், Liberal அரசாங்கம் Conservative கட்சியுடனும் (சில சந்தர்ப்பங்களில் ஏனைய எதிர்க்கட்சிகளும்) இணைந்து சில முக்கிய சட்டங்களை நிறைவேற்றினர். ஆனால், இரு பெரிய கட்சிகளுக்கு இடையிலான இந்த வகையிலான ஒத்துழைப்பு தொடருமா என்பது தெளிவாக இல்லை. வரவிருக்கும் வாரங்களில், November ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்படும் வரவு செலவுத் திட்டம் தான் மிக முக்கியமான நிகழ்ச்சி நிரலாக உள்ளது. வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தின் மீதான ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு என்பதால், இது நிறைவேறவில்லை என்றால் Liberal அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்பதுடன், கனடியர்கள் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

Conservative தலைவர் Pierre Poilievre, அரசாங்க செலவினங்களை ஏற்கனவே விமர்சித்திருந்தாலும், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பதற்கு முன், அதில் உள்ள விபரங்களை பார்க்க விரும்புகிறார். இதற்கிடையில், பிரதமர் Mark Carney, இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை  கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இதனால், அவருக்கு குறைந்தபட்சம் ஒரு எதிர்க்கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது.

சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவதற்கு வாக்குகள் எவ்வாறு அமைய வேண்டும்?

Liberal அரசாங்கமும் Conservative கட்சியும் இணைந்தால்?

இரு கட்சியினரும் ஒரு விடயத்தில் உடன்பட்டால், அந்தச் சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது உறுதியாகும். இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைந்து 312 வாக்குகளைக் கொண்டுள்ளன, இது ஏனைய  கட்சிகளின் வாக்குகளை விட பத்து மடங்கு அதிகமாகும்.

கடந்த இலைதுளிர் கால அமர்வில், இந்த இரு பெரிய கட்சிகளும் ஏனைய கட்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்ற முடியும் என்பதை நிரூபித்தன. உதாரணமாக, Liberal அரசாங்கத்தின் முக்கிய திட்டங்கள் தொடர்பான சட்டமூலம், Conservative கட்சியின் ஆதரவுடன் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் நிறைவேற்றப்பட்டது. Conservative கட்சியின் ஆதரவு இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற உதவியது மட்டுமல்லாமல், கோடை காலத்திற்கு முன்னர் அதை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக இரு கட்சிகளும் நடைமுறை தீர்மானங்களில் ஒன்றாக வாக்களித்தன.

Bloc Québécois அல்லது புதிய ஜனநாயக கட்சி Liberal அரசாங்கத்தை ஆதரித்தால்?

பெரும்பான்மைக்கு ஒரு சில ஆசனங்கள் மட்டும் குறைவாகப் பெற்றுள்ள Liberal அரசாங்கம், சிறிய எதிர்க்கட்சிகளில் ஒன்றின் ஆதரவைப் பெற முயற்சிக்கக்கூடும். இதில் Bloc அல்லது NDP கட்சிகள் இரண்டுமே செல்வாக்கு செலுத்த போதுமான ஆசனங்களைக் கொண்டுள்ளன. Liberal அரசாங்கம் Bloc கட்சியுடன் இணைந்து 190 ஆசனங்களைக் கொண்டுள்ளன, இது Conservative, NDP, பசுமைக் கட்சியினரின் ஆசனங்களை விட அதிகமாகும். Quebec மாகாணத்தின் நலன்களுக்கு ஏற்ப ஏனைய கட்சிகளுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக Bloc Québécois தலைவர் Yves-François Blanchet கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்னும் நிலையை இழந்த போதிலும், ஏழு ஆசனங்களுடன் NDP ஓரளவு செல்வாக்கு செலுத்துகிறது. அந்தக் கட்சி Liberal அரசின் சட்டத்தை ஆதரித்தால், அந்த இரண்டு கட்சிகளும் மற்றவர்களை விட 175 முதல் 167 வரை வாக்குகளைப் பெறலாம். NDP கட்சியின் இடைக்காலத் தலைவரான Don Davies, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சாத்தியமான செலவு குறைப்புகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார். November வரவு செலவுத் திட்டத்திற்கு NDP எவ்வாறு வாக்களிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஆனால் தலைமைத்துவத் தேடலில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசாங்கத்தை வீழ்த்துவதை (அதன் மூலம் ஒரு தேர்தலைத் தூண்டுவதை) NDP நோக்கமாகக் கொண்டிருக்காது என எண்ணலாம்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடியுமா?

சில விடயங்களில் Liberal அரசாங்கத்தை விஞ்சுவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்புள்ளது. மூன்று எதிர்க்கட்சிகளும் (Conservative, Bloc, NDP) ஒரு சட்டமூலத்தில் ஒரே நிலையில் வாக்களித்தால், Liberal அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் அதை நிறைவேற்றவோ அல்லது தோற்கடிக்கவோ அவர்களுக்கு போதுமான வாக்குகள் (173) கிடைக்கும். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த சட்டங்களை அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் மத்திய நிதியைப் பாதிக்கும் சட்டமூலங்களை அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. மூன்று எதிர்க்கட்சிகளும் கருத்தியல் வேறுபாடுகளைக் கொண்டிருப்பதால், ஒன்றாகச் சேர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு எதிலும் உடன்பட மாட்டார்கள்.

Bloc Québécois வாக்களிப்பில் இருந்து விலகினால்/தவிர்த்தால்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு விடயத்திலும் வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை; அவர்கள் வாக்களிக்காமலும் இருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றதைப் போலவே, சில சமயங்களில் கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்க விரும்பாத போதும், தேர்தலுக்குச் செல்ல விரும்பாத போதும் வாக்களிப்பதைத் தவிர்த்து விடக்கூடும். Bloc கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருந்தால், Liberal அரசாங்கம் 168 வாக்குகளுடன் மீதமுள்ள எதிர்க்கட்சிகளை (152 வாக்குகள்) மிஞ்ச முடியும்.

NDP வாக்களிப்பில் இருந்து தவிர்த்தால்/விலகினால்?

NDP வாக்களிக்கவில்லை என்றாலும், Liberal அரசாங்கம் வாக்கெடுப்பில் வெற்றி பெறலாம், ஆனால் அது மிகவும் இறுக்கமான வாக்கெடுப்பு முடிவாக இருக்கும். அவர்களுக்கு Conservative, Bloc, பசுமைக் கட்சியினரின் மொத்த ஆசனங்களை விட ஒரு ஆசனம் மட்டுமே அதிகமாக உள்ளது.

ஆனால், Liberal அரசாங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் ஆசனங்களை விட்டு விலகிச் செல்லும் போது, கட்சிக்கு நிலைமை இன்னும் கடினமாகிவிடும். முன்னாள் அமைச்சர் Chrystia Freeland நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக உள்ளார். முன்னாள் பிரதமர் Justin Trudeau அரசின் Bill Blair, Jonathan Wilkinson ஆகியோரும் தூதரக பதவிகளுக்கு பரிசீலிக்க படுகின்றனர். இவர்கள் மூவரும் Liberal கட்சியின் பாதுகாப்பான தொகுதிகளைப் பிரதிநிதித்துவ படுத்துகின்றனர். ஆனால் இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் பதவி விலக வேண்டும். இந்த Liberal உறுப்பினர்கள் எப்போது பதவி விலகுகின்றனர் என்பதைப் பொறுத்து அவர்களுக்கு, ஒன்று முதல் மூன்று ஆசனங்கள் வரை குறையும்.

NDP வாக்களிப்பில் பங்கேற்காமல், ஏனைய எதிர்க்கட்சிகள் ஒன்றாக வாக்களித்தால், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லாத நிலையிலும் Liberal அரசாங்கம் வெற்றி பெறலாம். ஆனால், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், வெற்றி பெற முடியாது. Conservative, Bloc, பசுமைக் கட்சியினரின் 167 வாக்குகள், ஒரு உறுப்பினரை இழந்த Liberal கட்சியினருடன் சமநிலையை உருவாக்க போதுமானவை. அவ்வாறு சமநிலை ஏற்பட்டால், சபாநாயகர் வாக்களிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வழிகாட்டியின் படி, சபாநாயகர் வழக்கமாக நிலைமையை மாற்றாமல் வைத்திருக்க வாக்களிப்பார். எதிர்காலத்தில் குறித்த விடயம் மீண்டும் கொண்டுவரப்பட்டு, பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படும்.

According to the House’s official guide to practice and procedure, the Speaker “normally votes to maintain the status quo,” including “preserving the possibility that the matter might somehow be brought back in the future and be decided by a majority of the House.”

ஆனால், இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் இல்லாத நிலையில், NDP வாக்களிக்காமல் இருந்து, மீதமுள்ள மூன்று கட்சிகள் ஒன்றாக வாக்களித்தால், Liberal அரசாங்கம் வாக்கெடுப்பில் தோல்வி அடையலாம்.

ஏனைய சாத்தியக்கூறுகள்

மேலுள்ள அனைத்து சூழ்நிலைகளும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சித் தலைமையின் உத்தரவுகளை பின்பற்றி, ஒரே மாதிரியாக வாக்களிப்பதை உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், சில சந்தர்ப்பங்களில் கட்சிகள் “சுதந்திரமாக வாக்களிக்க” தமது உறுப்பினர்களை அனுமதிக்கலாம். இதில் உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிக்கு ஏற்ப வாக்களிக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில், சட்டமூலம் அல்லது தீர்மானம் நிறைவேறுவது தனிப்பட்ட உறுப்பினர்களின் முடிவுகளைப் பொறுத்தது. அரிதான சந்தர்ப்பங்களில், நாடாளுமன்றம் முறையான வாக்கெடுப்பை தவிர்த்து, ஒரு சட்டமூலம் அல்லது தீர்மானத்தை நிறைவேற்றலாம். இதன் பொருள், உறுப்பினர்கள் உடன்படவில்லை என்றாலும், வாக்களிக்காமல் அதை நிறைவேற்ற ஒப்புக்கொள்கிறார்கள் என்பதாகும். இந்த ஆண்டு Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரை மீதான வாக்கெடுப்பு இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.

ஒரு எதிர்க்கட்சி தனது எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பினால், அதற்கான உத்தியையும் பயன்படுத்தலாம். அனைவரும் வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்கு பதிலாக, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கலாம், மற்றவர்கள் தேர்தலைத் தவிர்க்க வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.

ராகவி புவிதாஸ்

September தேசியம் சஞ்சிகையின் கட்டுரை

Related posts

ஸ்ரீலங்காவில் இன்னும் அமைதி இல்லை!

thesiyam

விரியும் புதிய அரசியல்களம்? : ‘பாரதி விழா’ vs ‘தமிழியல் விழா’

thesiyam

காக்க காக்க “தெருவிழாவை” காக்க!

Lankathas Pathmanathan

Leave a Comment