தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள் இலங்கதாஸ் பத்மநாதன் இலங்கதாஸ்பத்மநாதன் கட்டுரைகள்

Toronto நகர முதல்வர் பதவி துறப்பும் ஈழத்தமிழரும்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

| குறள் எண்: 423 l

Toronto நகர முதல்வர் John Tory திடீரென தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகிறது. நகர முதல்வர் பதவியில் இருந்து John Toryயின் வெளியேற்றம் Toronto நகருக்கு ஒரு சோகமான நிகழ்வு.

இந்த பதவி விலகலுக்கு காரணம் ஒரு ஈழத் தமிழ் பெண் என்ற “வதந்தி” கடந்த சில நாட்களாகவே பரவி வருகிறது.

இது வெறும் “வதந்தி”யே!

எந்தவித முகாந்தரமும் இல்லாமல் வெறும் ஊகங்களில் அடிப்படையில் இந்த “வதந்தி” உருவாக்கப்பட்டு  உலாவருகிறது.  இது வெறும் “வதந்தி” என்பது பொது வெளியில் பகிரங்கமாக பதவி செய்யப்பட வேண்டும் என்பதே இந்த பத்தியின் பிரதான நோக்கம்.

Toronto நகர முதல்வர் அலுவலம் உட்பட இந்த விடயத்துடன் தொடர்புடைய பலருடனும் வார விடுமுறையில் பல்வேறு தரங்களில் பேசியதிலும், இணையப் பரப்பில் பொதுவாக தேடிக் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையிலும் முடிவுக்கு வரக்கூடிய விடயம் இதுவாகும்.

இது போன்ற “வதந்தி”களை ஆரம்பத்திலேயே மறுதலிக்க வேண்டியது ஒரு சமூகத்தின் கடப்பாடாகும். தனி நபர்களை தாண்டி ஊடகங்கள், சமுக தலைவர்கள், அமைப்புகள் இது போன்ற அடிப்படையற்ற “வதந்தி”களை கடுந் தொனியில் மறுக்க வேண்டியதும் மறுதலிக்க வேண்டியதும் அவசியம்.

அதுபோன்ற வெளிப்படையான மறுப்பை அல்லது கண்டனத்தை வெளியிடும் நிலையில் கனடாவில் உள்ள தமிழர் அமைப்புகள் இல்லை என்பது துரதிருஷ்டவசமானது. அவர்களின் கடந்த கால தவறுகள் பல இன்று இந்த விடயத்தில் உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளி விட்டுள்ளது.

கனடாவில் தமிழர்கள் பலரும் அண்மைக் காலங்களில் பல்வேறு அரசியல் பதவிகளில் தம்மை நிலை நிறுத்தி வருகின்றனர். குறிப்பாக கனடாவில் பிறந்து கல்வி கற்ற ஈழத்தமிழரின் இரண்டாம்  தலைமுறையினர் பல மட்டங்களிலும் அரசியல் பதவிகளில் உள்ளனர். இவற்றில் பல, கட்சிகள் சார்பிலும், அரசாங்கத்தின் சார்பிலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பதவிகளாகும்.

ஒரு நகர, மாகாண சபை, நாடாளுமன்ற  உறுப்பினரின் அலுவலக உதவியாளர் முதல் அரசாங்கத்தின் மிக முக்கிய கொள்கை ஆலோசகர்கள் வரை தமிழர்கள் தம்மை நிலை நிறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்  நிலையில் உள்ள பல தமிழர்களையும் எமது சமூகத்திடமிருந்து விலகி நிற்கச் செய்யும் அபாயத்தை இதுபோன்ற அடிப்படையற்ற வதந்திகள் இலகுவாக உருவாகிவிடும்.

John Tory பதவி விலகல் விடயத்தில் தொடர்புபட்டவர் யார் என அறிந்த பெரு நீரோடத்தின் முக்கிய ஊடகங்களே அவரது பெயரை நெறிமுறை ஊடக பண்பாட்டுக்கு அமைவாக வெளியிடாத நிலையில் – எந்தவித அடிப்படையும் இல்லாத ஒருவரின் பெயரை களங்கப்படுத்துவதாக எண்ணி – ஒரு முழு சமூகத்தின் வளர்ச்சியையும் கேள்விக்குள்ளாக்கும் இதுபோன்ற நகர்வுகளுக்கு தேசியத்தின் கடுமையான கண்டனத்தை பகிரங்கமாக பதிவு செய்கிறோம்.

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

தேர்தல் 2021 நேருக்கு நேர் விவாதம் – வென்றது யார்?

Gaya Raja

அங்கீகரிக்கப்பட்ட COVID தடுப்பூசிகள் குறித்து கனேடியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Gaya Raja

Donate to seek the support of the Premier of Ontario regarding the Tamil Genocide Bill? An invitation on behalf of MPP Vijay Thanigasalam!

thesiyam

Leave a Comment

error: Alert: Content is protected !!