Conservative கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் Liberal அரசாங்கத்தில் இணைந்தார்.
Conservative கட்சியில் இருந்து Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Chris d’Entremont விலகினார்.
Pierre Poilievre தலைமையிலான அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியில் இருந்து விலகிய அவர், பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கத்தில் இணைகிறார்.
இந்த அரசியல் மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை (04) இரவு Liberal கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
2025 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட சில நிமிடங்களில், Conservative கட்சியில் இருந்து விலகி விட்டதாக கட்சித் தலைவர் Pierre Poilievre, சபாநாயகரிடம் ஆகியோருக்கு அறிவித்ததாக Chris d’Entremont கூறினார்.
தனது தொகுதி மக்கள், குடும்பத்தினருடன் தீவிரமான பரிசீலனையின் பின்னர் இந்த தெளிவான முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார்.
பிரதமர் Mark Carney, தனது தொகுதி வாக்காளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் முன்னுரிமைகளை நிறைவேற்றும் ஒரு புதிய வரவு செலவு திட்டம் மூலம் ஒரு சிறந்த பாதையை வழங்குகிறார் எனவும் Chris d’Entremont தெரிவித்தார்.
இதனால் அரசாங்க குழுவில் இணையும் முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
2019 ஆம் ஆண்டு முதல் Conservative நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் Chris d’Entremont, கடந்த பொதுத் தேர்தலில் Acadie-Annapolis தொகுதியில், Liberal கட்சியை விட 533 அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த April மாத தேர்தலில் Atlantic கனடாவில், Conservative தலைவர் Pierre Poilievre நடத்திய பிரச்சாரம் குறித்து Chris d’Entremont வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்த கட்சி விலகலை உறுதிப்படுத்திய Conservative நாடாளுமன்ற குழுத் தலைவர் Andrew Scheer, இது “ஏமாற்றமளிக்கிறது” என கூறினார்.
சபாநாயகர் பதவிக்கான போட்டி குறித்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த கட்சி விலகல் முடிவு எடுக்கப்பட்டதாக தான் நம்புவதாக Andrew Scheer தெரிவித்தார்.
2021 முதல் 2025 வரை நாடாளுமன்ற துணை சபாநாயகராக Chris d’Entremont பணியாற்றினார்.
இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அவர் மீண்டும் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் பங்கேற்றார்.
ஆனால் இறுதி நேரத்தில் தனது பெயரை சபாநாயகர் பதவிக்கான போட்டியில் இருந்து அவர் விலக்கிக் கொண்டார்.
Conservative கட்சியின் உந்துதலின் பேரில் இந்த முடிவை அவர் எடுக்க நேர்ந்தது என அப்போது தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினராக இணைவதற்கு முன்னர், 2003 முதல் 2019 வரை Nova Scotia சட்டமன்ற உறுப்பினராக Chris d’Entremont இருந்தார்.
Mark Carney தலைமையிலான Liberal கட்சி பெரும்பான்மை அரசாங்கத்திற்கு மூன்று வாக்குகள் மட்டுமே குறைவாக இருந்தது.
இந்த கட்சி மாற்றத்தின் பின்னர் அந்த எண்ணிக்கை இரண்டாக மாறியுள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தில் Liberal அரசாங்கம் 170 ஆசனங்களைக் கொண்டுள்ளது .
ஏனைய கட்சிகள் 173 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.
Conservative 143, Bloc Québécois 22, NDP 7, பசுமைக் கட்சி ஒன்று என ஆசன பகிர்வு அமைகிறது.
