Ontario-வின் வர்த்தக பிரதிநிதியை கடுமையாக சாடியதற்காக மன்னிப்பு கோருமாறு கனடாவுக்கான அமெரிக்க தூதரை Ontario முதல்வர் Doug Ford வலியுறுத்தினார்.
கனடாவுக்கான அமெரிக்கா தூதர் Pete Hoekstra-க்கும், Washington-னில் உள்ள Ontario மாகாணத்தின் வர்த்தக பிரதிநிதி Dave Paterson-க்கும் இடையில் இந்த வாரம் ஒரு “விரும்பத்தகாத பரிமாற்றம்” நிகழ்ந்ததாக தெரியவருகிறது.
திங்கட்கிழமை (27) Ottawa-வில் நடைபெற்ற கனடிய அமெரிக்க வணிக சபை கூட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Ontario அரசாங்கத்துடன் தொடர்புடைய இரண்டு பெயர் வெளியிடாத தரப்புகள் தெரிவித்தன.
இதன் போது Ontario அரசாங்கத்தின் வரி கட்டண எதிர்ப்பு விளம்பரம் குறித்து Pete Hoekstra, அவமானகரமாக கருத்துக்களை Dave Paterson-க்கு எதிராக தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது Dave Paterson “அமைதியாக இருந்தார்” என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
கனடாவுக்கான அமெரிக்க தூதரின் இந்த நடத்தையை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என கூறிய Doug Ford, அது “ஒரு தூதருக்கு தகுதியற்ற” நடவடிக்கை என விமர்சித்தார்.
Washington-னில் நடைபெறும் வர்த்தக ஒப்பந்தங்களில் ஒரு கருவியாக Dave Paterson இருக்கிறார் எனவும் அவர் கூறினார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Ronald Reagan-னின் குரலைக் கொண்ட Ontario அரசின் வரி எதிர்ப்பு விளம்பரம் தொடர்பாக கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை திடீரென முடித்துக் கொள்வதாக கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்தார்.
திங்கட்கிழமை வரை அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்ட இந்த விளம்பரத்தை Ontario அரசாங்கம் உடனடியாக நிறுத்தாததால் கனடாவுக்கு எதிராக மேலதிகமாக 10 சதவீத வரியை Donald Trump சனிக்கிழமை (25) அறிவித்தார்.
கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை Donald Trump திடீரென முடிவுக்குக் கொண்டு வரும் வரை, பேச்சுவார்த்தைகள் “முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்தன” என திங்கட்கிழமை மலேசியாவில் செய்தியாளர்களிடம் பேசிய கனடிய பிரதமர் Mark Carney கூறினார்.
புத்தாண்டுக்கு முன்னர் இரு நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று சாத்தியமல்ல என Pete Hoekstra திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.
கனடாவுடன் பேச்சுவார்த்தைகளை இடை நிறுத்தியுள்ளதாக கனடாவுக்கான அமெரிக்க தூதர் Pete Hoekstra திங்கட்கிழமை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்ததற்கு கனடாவின் மீது அவர் பழி சுமத்தினார்.
