கனடாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் (FGT) சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்துலகத் தமிழர் பேரவையின் யாப்பிற்கு அமைவாகவும், இடைக்கால நிர்வாக சபையின் ஒப்புதலுடனும், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவை பேரவை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.
இடைக்கால நிர்வாகத்திலிருந்து யாப்பின்படி மக்களாட்சித் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் நிரந்தர நிர்வாகக் கட்டமைப்பிற்கு மாறுவதில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும் என FGT இடைக்கால நிர்வாக சபையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கல்வி, சட்டம், தொழில்சார் துறைகள், சமூக தலைமைத்துவம், நிறுவன நிர்வாகம் ஆகியவற்றில் நீண்ட அனுபவமிக்க பின்வரும் ஐவர் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக கனடாவைத் தளமாக கொண்ட முனைவர் திருமதி செ.ஸ்ரீதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் இணைந்து ஆணைக்குழுவின் உறுப்பினர்களான ஐக்கிய இராச்சியத்தை தளமாக கொண்ட சங்கரப்பிள்ளை நடராஜா குலராஜா, சுவிட்சர்லாந்தை தளமாக கொண்ட முனைவர் விபுலானந்தர் கௌரிதாசன், ஆஸ்திரேலியாவைத் தளமாக கொண்ட பேராசிரியர் ஈ. ஏ. செல்வநாதன், இலங்கையைத் தளமாக கொண்ட முனைவர் ரவிந்திரகுமரன் நவரத்தினம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆணைக்குழு சுயாதீனமாகவும் நடுநிலையாகவும் செயற்பட்டு தேர்தல் கால அட்டவணையையும் நடைமுறைகளையும் வகுத்து வெளியிடுதல், உறுப்பினர்களின் தகுதியையும் வாக்களிக்கும் உரிமையையும் சரிபார்த்தல், வேட்புமனுத் தாக்கல், வாக்களிப்பு நடைமுறைகளை நிர்வகித்தல், பேரவையின் யாப்பிற்கு அமைவாகத் தேர்தல்களை நடத்திக் கண்காணித்தல், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளையும் முரண்பாடுகளையும் கையாளுதல், தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தல் ஆகிய பொறுப்புகளை நிறைவேற்ற உள்ளது:
தேர்தலின் அனைத்து கட்டங்களும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை ஆணைக்குழு உறுதி செய்யும் எனவும், இதற்குப் பேரவையின் உறுப்பினர்கள், நாடுவாரிச் செயற்குழுக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் FGT தலைவர் நிமால் விநாயகமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
