அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் குறித்து கனடிய பிரதமர் Mark Carney தலைமையிலான அரசு மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.
தேர்தல் முடிவுகள் குறித்து நேரடியாக எந்தக் கருத்தும் தெரிவிப்பதை தவிர்த்துள்ள கனடிய அரசு, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை வழக்கம் போல் தொடரும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.
அமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ள போதிலும், கனடிய அரசு தனது தற்போதைய உத்தியில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் பதவியேற்பார்கள் என்பதை நினைவு படுத்திய கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, கனடாவின் உடனடி கவனம் தற்போதைய Donald Trump நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதில் மட்டுமே உள்ளது என கூறினார்.
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் முன்னேறி வருவதாக தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, கனடிய பிரதமர் Mark Carney குறிப்பிட்டிருந்தார்.
கனடாவின் இறையாண்மை தொடர்பான முக்கிய பிரச்சினைகளில் வெள்ளை மாளிகை தனது பிடிவாதத்தைக் தளர்த்திக் கொண்டுள்ளதாகவும், தற்போதைய சூழல் கனடாவுக்கு சாதகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தத் தேர்தல் முடிவுகள், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கனடாவுக்கு கூடுதல் பலத்தைத் தரும் என Mark Carney தரப்பு முழுமையாக நம்புவதாக பெயர் வெளியிட விரும்பாத அரசின் மூத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
