தமிழ் சமூகத்தின் மனநலச் சவால்களுக்கு தீர்வு காண சமூகமும் கூட்டுப் பொறுப்பேற்று இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“Advancing Mental Health Equity for Tamil Communities” என்ற தமிழ் சமூகத்தின் மனநல சமத்துவம் தொடர்பான கலந்துரையாடலில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
யாழ் மருத்துவ பீட வெளிநாட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடிய அமைப்பு, Scarborough Health Network உடன் இணைந்து இந்த கலந்துரையாடலை சனிக்கிழமை (31) ஏற்பாடு செய்திருந்தது.
இதில் மத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, Ontario மாகாண துணை அமைச்சர் விஜய் தணிகாசலம், மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி, தமிழ் வைத்தியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் தமிழ் சமூகத்தின் மனநல நிலை குறித்த ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை வரவேற்றுப் பேசிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, இதில் நடைமுறைச் செயல்திட்டத்தின் உருவாக்கத்தை வலியுறுத்தினார்.
1990-களின் இறுதியில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் வன்முறை சார்ந்த சவால்களை சமூகம் ஒன்றிணைந்து எதிர்கொண்டதை நினைவு கூர்ந்த அமைச்சர், அதேபோன்று இன்றைய மனநலச் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும் என கூறினார்.
மனநலச் சவால்கள், மதுப்பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு குறித்த சவால்கள் இளைஞர்களை மட்டுமன்றி, 40 முதல் 65 வயது வரையிலான தலைமுறையினரிடமும் காணப்படுவதாக விஜய் தணிகாசலம் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர் சந்திப்பும், கலந்து கொண்டவர்களின் கேள்வி பதில் பகுதியும் இடம்பெற்றிருந்தது.
