Toronto Bridle Path குடியிருப்பில் அரங்கேறிய வீடுடைப்பு அத்துமீறல் கொள்ளைச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகின.
Toronto Bridle Path குடியிருப்பில் செல்வந்தர்களும், பிரபலங்களும் வசிக்கும் Bayview and Lawrence பகுதியில் வியாழக்கிழமை (29) அதிகாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் தந்தை, தாய், இரண்டு பிள்ளைகள் என் நால்வர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் David Morton, அவரது மனைவி Doriana Zohil-Morton, அவர்களின் 26 வயதான, 24 வயதான இரண்டு மகள்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
75 வயதான David Morton, The MAC Group என்ற Real Estate சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார்.
64 வயதான அவரது மனைவி அந்த நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
அதிகாலை சுமார் 3:45 மணி அளவில், முகமூடி அணிந்த மூன்று சந்தேக நபர்கள் துப்பாக்கிகள், சுத்தியலுடன் வீட்டின் பின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
மேல் தளத்திற்கு சென்ற கொள்ளையர்கள், குடும்பத்தினரை மிரட்டி நகைகள், பணத்தை கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டும், சுத்தியலால் தாக்கியும் உள்ளனர்.
இதில் David Morton, அவரது இரண்டு மகள்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டுள்ளது.
அவரது மனைவி Doriana Zohil-Morton சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அயலவர்களினால் அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதில் காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்த David Morton, அவரது ஒரு மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கொள்ளையில், மூன்று சந்தேக நபர்களும் ஒரு கருப்பு நிற SUV வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
அவர்கள் மூவரும் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து Toronto காவல்துறையின் கொள்ளைச் சம்பவங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.
குறிப்பிட்ட தாக்குதலின் போது சந்தேக நபர்கள் துப்பாக்கிகள், சுத்தியலை பயன்படுத்தியதால், அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சந்தேக நபரை அடையாளம் காண, அப்பகுதியிலுள்ள CCTV ஒளிப்பதிவுகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
