கனடா-ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்கள் பங்கேற்கும் சிறப்புமிக்க உச்சிமாநாடு Montreal நகரில் ஆரம்பமாகிறது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில் தனது உலகளாவிய பொருளாதார கூட்டணியை விரிவாக்கும் நோக்கில் கனடா இந்த மாநாட்டை முன்னெடுக்கிறது.
இதில் உலகெங்கிலும் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் புதிய கூட்டு ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக கனடா வந்தடைந்துள்ளனர்.
வியாழக்கிழமை (29) ஆரம்பமாகும் இந்த மாநாடு சனிக்கிழமை (31) வரை தொடரவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், பசுமை ஆற்றல், வர்த்தக பங்களிப்பு குறித்த இறுதி ஒப்பந்தங்களை இருநாட்டுப் பிரதிநிதிகளும் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த மாநாட்டை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்துடன் கூட்டணி என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் David McGuinty குறிப்பிட்டார்.
அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சந்தையான ஐரோப்பிய ஒன்றியத்துடன் எமது உறவை அடுத்த கட்டத்திற்கு விரிவாக்குவது கனடாவின் முதன்மை இலக்கு என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த மாநாடு Quebec மாகாணத்தில் உள்ள Montreal நகரில் நடைபெறுகின்ற போதிலும், அண்மையில் மாகாண தேர்தலில் வெற்றி பெற்ற புதிய முதல்வர் Paul St-Pierre Plamondon இந்த உச்சிமாநாட்டை முழுமையாக புறக்கணித்துள்ளார்.
இறையாண்மை கொண்ட Quebec மாகாணத்தை மத்திய அரசின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வைப்பதற்கான முயற்சியாகவே இந்த மாநாட்டை பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal அரசு பயன்படுத்துவதாகவும் அவர் மிகக் கடுமையான பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு இணை உறுப்பினராக மாற்றுவதற்கான சிறப்பு சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் முதலில் முன்வைத்திருந்தது.
ஆனால், கனேடிய, ஐரோப்பியத் தரப்பிலிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக இந்தத் திட்டம் தற்போது முழுமையாக கைவிடப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
