கனடா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த தாமதத்திற்கு Alberta பொது வாக்கெடுப்பு காரணம் என அமெரிக்க ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் Kevin Hassett குற்றம் சாட்டினார்.
Fox ஊடகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ( 25) அளித்த பிரத்யேக பேட்டியில் அமெரிக்க ஜனாதிபதியின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் Kevin Hassett இந்த அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இரு நாடுகளும் தற்போது ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு “மிக அருகில்” வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கனடாவில் அண்மையில் எதிர்கொள்ளபட்ட Alberta பிரிந்து செல்வது தொடர்பான அரசியல் குழப்பங்கள் காரணமாகவே இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை நிலை நீடித்தது என அவர் தெரிவித்தார்.
மாகாணப் பிரிவினை விவாதங்கள் தீவிரமாக இருந்த சூழலில், கனடியத் தரப்புடன் எந்த ஒரு முறையான பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்க இயலாமல் போனதாக கூறிய Kevin Hassett, தற்போது Alberta மக்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில் கடந்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகள் மீண்டும் வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் Howard Lutnick தற்போதும் கனடியப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால், விரைவில் ஒரு சுமுக உடன்பாடு எட்டப்படும் என Kevin Hassett நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ( 23) வெள்ளை மாளிகை சில கனடியப் பொருட்களுக்கு 50 சதவீத வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில் இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலம் உள்ள நிலையில் இந்த அறிவித்தல்கள் வெளியாகி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
