கனடியப் பொருட்கள் சிலவற்றுக்கு வரி விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
Maine மாநில குடியரசு கட்சியின் மேலவை உறுப்பினர் Susan Collins வெள்ளிக்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
கனடா – அமெரிக்கா இடையே நிலவி வரும் கடுமையான வர்த்தகப் போரில் ஒரு முக்கியப் புதிய திருப்பமாக இந்த அறிவித்தல் வெளியானது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள சூழலில் இந்த அறிவித்தல் வெளியானது
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கான அதிரடி வரிகளை நீக்கவோ அல்லது குறைக்கவோ அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக Susan Collins அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பதட்டங்களை குறைக்கும் நோக்கில் இந்த ஆரம்பகட்ட வரி விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனடிய அரசுடன் சுமுகமான ஒரு வர்த்தக உடன்பாட்டை எட்டுவதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்தார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொண்ட Donald Trump, “இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நிலையான வர்த்தக ஒப்பந்தத்தை செய்வதற்காகக் கனடா தற்போது மிகவும் கடுமையாக உழைத்து வருகிறது என தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்கா நேர்மையான முறையில் பேச்சுவார்த்தைக்கு வந்தால் உடனடியாக புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா தயாராக உள்ளதாக கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
தற்போது துருக்கிக்கு தனது அதிகாரப்பூர்வ இருதரப்புப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
Istanbul நகரில் செய்தியாளர்களிடம் பேசிய Mark Carney, கனடா எப்போதும் அமெரிக்க அரசுடன் சுமுகமான முறையில் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதை உறுதிப்படுத்தினார்.
கனடியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே தங்களின் ஒரே நோக்கம் என தெரிவித்த Mark Carney, அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்பாக இதனை முடிக்க வேண்டும் என்ற எந்த ஒரு காலக் கெடுவும் தங்களுக்கு கிடையாது எனவும் தெளிவுபடுத்தினார்.
கடந்த புதன்கிழமை (21) கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் தொலைபேசி வாயிலாக நீண்ட உரையாடல் ஒன்றை முன்னெடுத்த நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
