தேசியம்
செய்திகள்

கனடாவில் ஆரம்பமாகிறது உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026

உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 Toronto நகரில் வியாழக்கிழமை (15) ஆரம்பமாகிறது.

October 18 (ஞாயிற்றுக்கிழமை) வரை 4 நாட்கள் இந்த மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வு மாநாட்டை அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT – Federation of Global Tamils) ஒருங்கிணைக்கிறது.

இந்த ஆண்டின் மாநாடு “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற அதிநவீன தொனிப்பொருளின் கீழ் நடத்தப்படுகிறது.

வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உலகில், உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழியின் நிலைத்தன்மை, பயன்பாடு, மொழித் தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து இதில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் நிகழ்வுகள் Toronto பெரும்பாகத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன.

 

 

இதன் ஆரம்ப நிகழ்வு வியாழன் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

தொடர்ந்து 17-ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு, கலந்துரையாடல்கள் Scarborough நகரில் உள்ள Centennial கல்லூரி நிகழ்வு மையத்தில் நடைபெறும்.

October 17 சனிக்கிழமை இரவு பிரம்மாண்ட கலை இரவு Scarborough Metropolitan மையத்தில் அரங்கேற உள்ளது.

இதில் தமிழர்களின் கலை, பாரம்பரிய இசை, கலாச்சாரத்தை போற்றும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டின் இறுதி நாளான ஞாயிறன்று FGT வருடாந்த விருந்தும் விருதும் இரவு நிகழ்வு நடைபெறுகிறது.

 

இதில் கல்வி, தொழில்நுட்பம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

இந்த 4 நாட்கள் மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வாளர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர்.

இந்த உலகளாவிய முயற்சி, தமிழின் தொன்மை மரபையும், மலரவிருக்கும் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளையும் இணைக்கும் ஒரு பாலமாக அமையும் என அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts

Québec தேர்தல் தோல்வியின் எதிரொலி: CAQ கட்சித் தலைவர் பதவியிலிருந்து Christine Fréchette விலகல்!

Lankathas Pathmanathan

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மேலதிக நிதியுதவி

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்து – விமானி மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment