Hamilton நகரில் உள்ள Stelco தொழிலாளர்களின் பணி நீக்க விவகாரம் கனடிய அரசுக்கும், தொழில்சாலையின் அமெரிக்க உரிமையாளருக்கும் இடையே ஒரு கடுமையான சட்ட போராக மாறி வருகிறது.
இந்த விடயத்தில் அரசின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி Stelco நிர்வாகம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வருவதால், அந்நிறுவனத்தின் கனடிய சொத்துக்களைக் கட்டாயமாக விற்கச் செய்வது அல்லது கடுமையான நிதி அபராதங்களை விதிப்பது உள்ளிட்ட அதிரடி சட்ட நடவடிக்கைகளை எடுக்க கனடிய மத்திய அரசு தயாராகி வருகிறது.
கடந்த மாதம் Stelco நிறுவனம் தனது Hamilton தொழில்சாலையின் சில பிரிவுகளை மூடுவதாகவும், சுமார் 500 தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும் அதிரடியாக அறிவித்தது.
அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வரிவிதிப்புகள் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக நிர்வாக தரப்பில் காரணம் கூறப்பட்டது.
இந்த விடயத்தில் பதில் நடவடிக்கையாக அனைத்து வழிகளும் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
கனடிய தொழிலாளர்களை பாதுகாக்க ஆளும் Liberal அரசு இந்த விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என புதன்கிழமை (14) செய்தியாளர்களிடம் பேசிய கனடிய தொழில்துறை அமைச்சர் Melanie Joly, திட்டவட்டமாக கூறினார்.
“Stelco நிறுவனம் கனடிய அரசுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
கனடிய அரசாங்கத்திற்கும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு இடையேயான இந்த மோதலில் நூற்றுக்கணக்கான சாதாரண தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கனடிய அரசை வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்க எங்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என இந்த விடயம் குறித்து United Steel Workers Local 1005 தொழிற்சங்கத்தின் தலைவர் Ron Wells குற்றம் சாட்டினார்.
இதில் கருத்து தெரிவித்துள்ள Hamilton நகர முதல்வர் Andrea Horwath, அமெரிக்காவின் வரிப் போரினால் கனடிய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும், தொழிலாளர்களின் வேலைகளை பாதுகாக்கத் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.
