2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான Nobel பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள நவநீதம் “நவி” பிள்ளைக்கு கனடாவை தலைமையகமாக கொண்டுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
தமிழ் வம்சாவளி பெண்மணி நவநீதம் “நவி” பிள்ளைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்வதாக FGT வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
Nobel பரிசு அறிவித்தல் வெள்ளிக்கிழமை (09) வெளியான நிலையில் FGT அறிக்கை வெளியானது.
உலக அரங்கில் மனித உரிமைகள், நீதி, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக அவர் ஆற்றிவரும் ஒப்பிடமுடியாத வாழ்நாள் அர்ப்பணிப்பிற்கு இவ்வுயரிய விருது மிகச் சிறந்த அங்கீகாரமாக அமைந்துள்ளது என FGT தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்தார்.
நவநீதம் பிள்ளையின் இந்தச் சாதனையை மிகுந்த மரியாதையுடனும், எல்லையற்ற நன்றியுணர்வுடனும் உலகத் தமிழினத்தின் சார்பாகக் கொண்டாடுகிறோம் என FGT அறிக்கை குறிப்பிடுகிறது.
