Guelph Homecoming வன்முறை சந்தேக நபர்கள் 11 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
Guelph பல்கலைக்கழகத்தின் Homecoming அத்துமீறிய கொண்டாட்ட வன்முறைகள் குறித்த காவல்துறையினரின் தீவிர விசாரணை தொடர்கிறது.
Chancellors Way வீதியில் September 26 அன்று 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு நடத்திய வன்முறை கொண்டாட்டத்தில் 60 பேர் வரை காயமடைந்தனர்
இதுவரை இந்த வன்முறையில் ஈடுபட்ட 11 நபர்களைப் பொதுமக்கள் உதவியுடன் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தள ஒளிப்படங்கள், ஒளிப்பதிவுகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தவிரவும் இதுவரை அடையாளம் காணப்படாத 12 சந்தேக நபர்களை தொடர்ந்து அடையாளம் காணும் முயற்சிகளை காவல்துறையினர் முன்னெடுக்கின்றனர்.
இவர்களின் ஒளிப்படங்களை மீண்டும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள காவல்துறையினர் இவர்கள குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் தம்மை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேவேளை எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க ஒரு புதிய கூட்டு அதிரடிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
Guelph காவல்துறை, Guelph பல்கலைக்கழக நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள், Guelph பொது மருத்துவமனை மேலாளர்கள் ஒன்றிணைந்து செவ்வாய்க்கிழமை (06) அவசர உயர்மட்ட சந்திப்பை நடத்தினர்.
இந்த சந்திப்பில் September மாதம் நிகழ்ந்த வன்முறை போன்ற வன்முறைகளை ஆரம்பத்திலேயே தடுக்கவும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தகுந்த தண்டனை பெற்றுத் தரவும் அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கிய ஒரு பிரத்தியேக கூட்டு செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்குழுவினர் தொடர்ந்து கூடி புதிய பாதுகாப்புப் பரிந்துரைகளை மாகாண அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்
