இரண்டு கனடிய இராணுவ உறுப்பினர்கள் Toronto-வில் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலுடன் தொடர்பு உட்பட ஆயுதத் திருட்டு வழக்குகளில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சம்பவத்தை கனடா தேசிய பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை (05) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கனடிய ஆயுதப் படையைச் சேர்ந்த Sachintha Fernando, James Moreau ஆகிய இரண்டு இராணுவ உறுப்பினர்கள் August 11 அன்று கைது செய்யப்பட்டனர்.
ஆட்கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுதல், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆபத்தான இராணுவ ஆயுதங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் Toronto காவல்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் James Moreau, 2018 March மாதம் இராணுவத்தில் இணைந்த தோடு, 2020-ல் COVID காலப் பாதுகாப்புப் பணியான Operation LASER திட்டத்திலும் களமிறக்கப்பட்டார்
Sachintha Fernando, கடந்த 2020 January மாதத்தில் reserve வீரராக இராணுவத்தில் இணைந்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இவ்விருவருமே Toronto நகரின் Queen Street East பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க Moss Park Armoury தளத்தை மையமாகக் கொண்டு இயங்கும் 7-வது Toronto Regiment என்ற reserve பீரங்கிப் பிரிவில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றி வந்தவர்கள் என தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Laura McIntyre-Grills தெரிவித்தார்.
இவர்களின் கைது வழக்கின் தீவிரத்தன்மை கருதி இதுவரை காலத்திலும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இவர்களது கைது நடவடிக்கையை தொடர்ந்து, இருவரும் தங்களது இராணுவக் கடமைகளிலிருந்து உடனடியாக முழுமையாக நீக்கப்பட்டனர்.
கனடிய ஆயுதப் படையின் எந்தவொரு ஆயுதங்கள், தளவாடங்கள், இராணுவப் பாதுகாப்பு முகாம்களுக்குள் நுழைவதற்கும் இவர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவம் தமது உயர்மட்ட நிர்வாக தணிக்கை விசாரணையை முறைப்படி ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் இவர்கள் இராணுவச் சட்டங்களின்படி நிரந்தரமாகப் பணியிலிருந்து நீக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
