Scarborough பகுதியில் தமிழர் நகைக்கடை மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Markham Road and Steeles பகுதியில் அமைந்துள்ள ஜெயசாயி நகைக்கடையை குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு புதன்கிழமை (30) அதிகாலை 2:24 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்த அவசர தகவலைத் தொடர்ந்து Toronto காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த, அங்கு நடத்திய முதல் கட்ட சோதனையில், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன.
மர்ம நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில், ஜெயசாயி நகைக்கடையின் கண்ணாடி ஜன்னல்கள் குண்டு பாய்ந்து பலத்த சேதமடைந்துள்ளன.
நள்ளிரவு நேரம் என்பதால் நகைக்கடைக்குள் எவரும் இல்லாத காரணத்தால், இதில் எவருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் அல்லது அவர்கள் தப்பியோட பயன்படுத்திய வாகனம் குறித்த எந்தவொரு விவரங்களையும் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு (CCTV) காட்சிகளை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி வரும் காவல்துறையின் இந்த சம்பவம் குறித்து விபரம் அறிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
