Ontario மாகாணத்தின் Sault Ste. Marie நகரில் 15 வயது சிறுவனைக் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
Sault Ste. Marie நகரில் 15 வயது சிறுவன் ஒருவனை கடத்திச் சென்ற இருவர், வாகனம் தவறான பாதையில் சென்று சர்வதேச எல்லைப் பாலத்தில் நுழைந்ததால் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
இந்த கடத்தல் முயற்சி சம்பவம் செவ்வாய்க்கிழமை (22) வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கனடா – அமெரிக்க எல்லையோரப் பகுதியில், இரண்டு ஆண்கள் 15 வயதுடைய சிறுவன் ஒருவனை கடத்தியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடத்தல்காரர்கள் அந்தச் சிறுவனை சர்வதேச எல்லை ஊடக கடத்திச் செல்ல முயன்ற போது, அங்கிருந்த எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
சிறுவனைப் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்ற கடத்தல்காரர்கள், அவனை ஒரு தங்குமிடத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால், வழியில் தவறான திருப்பம் எடுத்ததால், அவர்கள் அமெரிக்காவுக்குச் செல்லும் Sault Ste. Marie சர்வதேச எல்லைப் பாலத்திற்குள் நுழைந்தனர்.
அங்கிருந்து மீண்டும் கனடாவுக்குள் நுழைய முயன்றபோது, கனடிய எல்லைப் பாதுகாப்பு முகமையக (CBSA) அதிகாரிகள் சிறுவனைப் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களையும் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் திடுக்கிடும் கடத்தல் சம்பவம் கடந்த சனிக்கிழமை (19) அன்று அரங்கேறியுள்ளது.
இதில் கைதானவர்களில் ஒருவர் Sault Ste. Marie பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் எனவும், மற்றொருவர் Sudbury பகுதியைச் சேர்ந்த 29 வயது நபர் எனவும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
எல்லை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட இந்த இருவர் மீதும் ஆள் கடத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
எல்லை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், இந்த இரு நபர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு, கடத்தலின் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் கைதானவர்கள் மீதான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
