கனடிய பிரதமரும் பிரான்ஸ் ஜனாதிபதியும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கனடிய பிரதமர் Mark Carney, பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்காவுடனான கடுமையான வர்த்தகப் போருக்கு மத்தியில், சர்வதேச கூட்டணிகளை பலப்படுத்தும் நோக்கில் கனடிய பிரதமர் இந்த சந்திப்பை முன்னெடுத்தார்.
கனடாவின் New Foundland மாகாணத்தின் தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 20 KM தொலைவில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்குட்பட்ட தீவுப் பகுதியான Saint-Pierre என்ற இடத்தில் இந்த முக்கிய சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (20) அரங்கேறியது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்ட கால வரலாற்று ரீதியான நட்புறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் இச்சந்திப்பில் உறுதி பூண்டனர்.
உலகளாவிய வர்த்தக சவால்கள், நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு, முக்கியப் பொருளாதாரத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக விவாதித்தனர்.
அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக வரிகளுக்குப் பதிலடியாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய வலுவான கூட்டணியை உருவாக்க பிரதமர் Mark Carney எடுத்து வரும் முயற்சிகளுக்கு இந்தச் சந்திப்பு மேலும் வலு சேர்த்துள்ளது.
அடுத்த வாரம் New York நகரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக இரு உலகத் தலைவர்கள் இந்த எல்லையோர தீவில் சந்தித்துள்ளது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
