Quebec திருவிழாவில் கூட்டத்திற்குள் புகுந்த வாகனத்தால் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Western Festival de St-Tite திருவிழாவில் நபர் ஒருவர் தனது வாகனத்தை கூட்டத்திற்குள் அதிவேகமாகச் செலுத்தியதில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை (19) அதிகாலை நிகழ்ந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த Quebec மாகாணக் காவல்துறையினர் வாகனத்தை ஓட்டி சென்ற நபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 வயதான இவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் பின்னர் Québec City-யில் கைதானார்.
St-Tite பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய திருவிழாவின் போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
இதில் காயமடைந்த 6 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரின் உயிர்க்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
திருவிழாக் களத்தில் இருந்த சில நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதம் மற்றும் தகராறு, பின்னர் பெரும் வன்முறையாக வெடித்ததே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என மாகாண உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் Ian Lafrenière தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு ஓட்டுநரைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகிறது.
இந்தச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்பது முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனமும் வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் Christine Fréchette, Parti Québécois தலைவர் Paul St-Pierre Plamondon, Quebec மாகாண Liberal தலைவர் Charles Milliard, Québec மாகாண Conservative தலைவர் Éric Duhaime, Québec Solidaire இணைத் தலைவர் Ruba Ghazal உள்ளிட்டவர்கள் இந்த சம்பவம் குறித்து கண்டனமும் வருத்தமும் தெரிவித்தனர்.
காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், மாகாண உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் Ian Lafrenière நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த திருவிழாக் களத்தில் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆனாலும் சனிக்கிழமை தொடர்ந்து திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் என திருவிழாவின் தகவல் தொடர்பு இயக்குனர் தெரிவித்தார்.
அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையுடன் இணைந்து நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
