Ottawa நகர முதல்வர், Ontario மாகாண முதல்வர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக Ottawa நகர முதல்வர் வேட்பாளர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Ottawa நகரைச் சேர்ந்த 48 வயதான Geoffrey Nicholas Griplas என்பவர் மிரட்டல் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இவர் Ottawa நகர முதல்வர் Mark Sutcliffe, Ontario மாகாண முதல்வர் Doug Ford ஆகியோருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
Geoffrey Nicholas Griplas செவ்வாய்க்கிழமை (15) Kingston காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது இரண்டு குற்றவியல் துன்புறுத்தல் வழக்குகள், இரண்டு மிரட்டல் விடுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த மிரட்டல் வழக்குகள் அனைத்தும் September 6 முதல் 13 வரை சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட மிரட்டல்களுடன் தொடர்புடையவை என தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் Kingston நகரில் நடந்துள்ளதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
கைது செய்யப்பட்டவர் Geoffrey Nicholas Griplas பிணை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட Geoffrey Nicholas Griplas, அடுத்த மாதம் நடைபெறவுள்ள Ottawa நகர முதல்வர் தேர்தலுக்கான வேட்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு Ottawa நகரத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
மேலும், இவர் இதற்கு முன்னரும் சில துன்புறுத்தல் வழக்குகளைச் சந்தித்தவர் என்பது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
Ottawa நகர தேர்தல் October 26 அன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்தத் தேர்தலில் நகர முதல்வர் பதவிக்காக தமிழரான Neil சரவணமுத்து உட்பட மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
