கனடா தனது எதிர்காலத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது என உலகளாவிய முதலீட்டாளர்கள், வணிகத் தலைவர்களின் பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் Mark Carney அறிவித்தார்.
முதலாவது கனடா முதலீட்டு மாநாடு (Canada Investment Summit) திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
பிரதமர் Mark Carney திங்கள் மாலை Toronto-வில் இந்த மாநாட்டை ஆரம்பித்து வைக்கிறார்.
கனடாவின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சியாக, வரலாறு காணாத வகையில் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
$1 trillion இலக்குடன் இந்த மாநாட்டை Mark Carney முன்னெடுக்கிறார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் $1 trillion முதலீட்டைத் தூண்டுவதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் ஆரம்பத்திற்கு முன்னதாக பல முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகியுளதாக Mark Carney அறிவித்தார்.
இந்த மாநாட்டின் அரசியல், வணிகத் தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (13) மாலை நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய பிரதமர் Mark Carney, பல முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகி விட்ட அறிவித்தலை வெளியிட்டார்.
ஞாயிறு மாலை நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் , இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பே பல முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டதாக தெரிவித்தார்.
உலகிற்குத் தேவையான ஆற்றல், வளம், திறமை, தொழில்நுட்பம், மூலதனம் ஆகிய அனைத்தும் கனடாவிடம் உள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் குவைத், மலேசியா, நெதர்லாந்து, சிங்கப்பூர், கத்தார், நோர்வே, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நூற்றுக்கும் அதிகமான முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள், உலகளாவிய சொத்து மேலாளர்கள் பங்கேற்கின்றனர்.
திங்கள் மாலை Toronto கலைக்கூடத்தில் (Art Gallery of Ontario) பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் கலந்து கொள்ளும் மாநாட்டின் ஆரம்ப நாள் இரவு விருந்து நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை (15) Toronto மத்திய பகுதியில் அமைந்துள்ள Four Seasons விடுதியில் முதலீட்டாளர்களுடன் பிரதமர் Mark Carney, மாகாண முதல்வர்கள் கலந்தாலோசனை கூட்டங்களை நடத்துகின்றனர்.
கனடாவின் முன்னாள் Conservative கட்சி பிரதமர் Stephen Harper இந்த மாநாட்டின் நிறைவுரையை ஆற்றவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த மாநாட்டுக்கு எதிராக சுற்றுச்சூழல், வீட்டுவசதி, தொழிலாளர் சங்க அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன.
கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தொடரும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
