கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்குமான முதலாவது ‘கனடா முதலீட்டு மாநாடு’ (Canada Investment Summit) திங்கட்கிழமை (14) ஆரம்பமாகிறது.
September 14, 15 ஆகிய திகதிகளில் Toronto-வில் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் Mark Carney ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கனடாவின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், கனடிய வரலாற்றிலேயே முதன்முறையாக இத்தகையதொரு பிரம்மாண்ட முதலீட்டு மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள், பெரும் முதலீட்டாளர்கள், நிதித்துறை வல்லுநர்களை பிரதமர் Mark Carney நேரில் சந்திக்கவுள்ளார்.
இதில் கனடாவின் புதிய ‘மூலதனச் செயல்திட்டத்தை’ (Capital Agenda) அவர் சர்வதேச அரங்கில் முன்வைப்பார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் உள்நாட்டு தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான அண்மைய வர்த்தக விவாதங்களுக்கு மத்தியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
கனடா முதலீடுகளுக்கு பாதுகாப்பான, இலாபகரமான நாடு என்பதை உலக நாடுகளுக்கு பறைசாற்ற பிரதமருக்கு கிடைத்துள்ள மிக முக்கிய வாய்ப்பாகப் பொருளாதார வல்லுநர்கள் இதைக் கருதுகின்றனர்.
