October மாதம் நடைபெறவுள்ள Toronto நகர முதல்வர் தேர்தலை ஒட்டி, முன்னணி வேட்பாளர்கள் தங்களது சொத்து வரி (Property Tax) திட்டங்களை வெளியிட்டனர்.
தற்போதைய நகர முதல்வர் Olivia Chow தனது முந்தைய ஆண்டுகளின் சொத்து வரி உயர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதற்கு அவரது எதிர் வேட்பாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்தை எதிர்வரும் புதன்கிழமை (09) ஆரம்பிக்கவுள்ள Olivia Chow, தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சொத்து வரியை பணவீக்க விகிதத்திற்கு இணையாகவோ அல்லது அதற்கு அருகில் மட்டுமே உயர்த்துவதாக உறுதியளித்துள்ளார்.
Toronto நகரம் தற்போது நிதி ரீதியாக நிலையான நிலையை எட்டியுள்ளதால், தனது முதல் காலகட்டத்தில் விதிக்கப்பட்ட 9.5% (2024), 6.9% (2025) போன்ற சொத்து வரி உயர்வுகள் இனி வராது என அவரது பிரச்சாரக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்குறுதியை ஒரு “பலவீனமான தேர்தல் நாடகம்” என முன்னாள் மத்திய அமைச்சரும், நகர முதல்வர் வேட்பாளருமான Chris Alexander சாடியுள்ளார்.
தான் நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல் ஓராண்டிற்கு சொத்து வரியை முற்றிலும் உயர்த்துவதில்லை எனவும், இரண்டாம் ஆண்டில் பணவீக்கத்தை விடக் குறைவான அளவிலேயே வரி உயர்வு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் “மிதமான” வரி உயர்வு தருவதாகக் கூறி விட்டு, பதவிக்கு வந்ததும் வரலாற்றிலேயே இல்லாத அளவு வரியை உயர்த்திய Olivia Chow-வை மக்கள் நம்பக் கூடாது என நகரசபை உறுப்பினரும் மற்றொரு நகர முதல்வர் வேட்பாளருமான Brad Bradford எச்சரித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் சுமையைக் குறைப்பதற்கான தங்களின் விரிவான திட்டங்களை உரிய நேரத்தில் வெளியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Toronto நகரின் நிதிப் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு சவால்களுக்கு மத்தியில், இந்த விடயம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Toronto நகர முதல்வர் அடுத்த மாதம் 26 -ஆம் திகதி தேர்தெடுக்கப்படவுள்ளார்.
இந்தப் போட்டிக் களத்தில், பதவியில் உள்ள நகர முதல்வர் Olivia Chow, நகரசபை உறுப்பினர் Brad Bradford, முன்னாள் மத்திய அமைச்சர் Chris Alexander ஆகியோருடன், தகுதிபெற்ற மேலும் 42 வேட்பாளர்கள் உள்ளனர்.
