கடுமையான இடியுடன் கூடிய மழையால் Ontario-வின் பல பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
ஆலங்கட்டி மழை, பேரழிவை ஏற்படுத்தும் காற்று ஆகியவற்றால் புதன்கிழமை பரவலான வெள்ளம், பெரிய அளவிலான மின்சாரத் தடை, மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுதல் ஆகியவற்றை ஏற்படுத்தின.
“அபாயகரமான” இடியுடன் கூடிய புயல் Toronto-வை தாக்கி, கனமழை பொழிந்தது.
புயலால் முக்கிய சாலைகளில் விரைவாக வெள்ளம் சூழ்ந்ததால் வாகன சாரதிகள் எதிர்பாராத சூழலுக்கு ஆளாயினர்.
நீரில் மூழ்கிய வாகனங்களில் சிக்கியிருந்த பலரை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பலத்த காற்று மின்சார கம்பிகளையும் மரங்களையும் சாய்த்ததுடன், பல கட்டிடங்களின் கூரைகளையும் பெயர்த்து வீசியது.
தீவிரமான புயல்கள் காரணமாக, மக்கள் பாதுகாப்பிற்காக வீட்டுக்குள்ளேயே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தும் அவசரக்கால எச்சரிக்கைகள் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தொலைக்காட்சி, வானொலிகளிலும் அவை ஒளி/ஒலிபரப்பப்பட்டன.
GTA பகுதி முழுவதும் சாலைகள், நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள பரவலான வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ள அவசர உதவி பிரிவினர் களமிறங்கப்பட்டனர்.
DVP நெடுஞ்சாலை வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டது.
புதன் இரவு 8 மணி நிலவரப்படி, 45,000 வாடிக்கையாளர் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக Toronto Hydro தெரிவித்தது.
இந்த எண்ணிக்கை 65,000 வாடிக்கையாளர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Toronto மருத்துவமனையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Michael Garron மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வெள்ள நீர் புகுந்துள்ள போதிலும், அது தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.
கடுமையான வானிலை காரணமாக CNE கண்காட்சி முன்கூட்டியே மூடப்பட்டது.
மாகாணத்தின் பல பகுதிகளிலும் நடைபெற இருந்த நிகழ்வுகள் பலவும் இரத்து செய்யப்பட்டன.
Kitchener நகருக்கு அருகே சூறாவளி ஏற்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு Ontario-வின் பிற பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ததால், சுற்றுச்சூழல் கனடா, சூறாவளி சிவப்பு எச்சரிக்கைகள் உட்பட பல வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டது.
