அமெரிக்காவிற்கு கனடா நாட்டின் உதவி தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீண்டும் தெரிவித்தார்.
வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து கனடா விலகியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கனடிய பிரதமர் Mark Carney, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக முதலில் அறிவித்தார்.
தவிரவும் September 8 முதல் அமெரிக்காவுக்கு இணையாக பழிவாங்கும் வரி விதிப்புகளை அமுல்படுத்தப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியின் தற்போதைய கருத்துக்கள் பகிரப்பட்டன.
கனடாவைச் சார்ந்திருப்பதை அமெரிக்கா குறைத்துக் கொள்ள வேண்டும் என புதன்கிழமை (02) செய்தியாளர்களிடம் கூறிய Donald Trump, கனடாவை விட சிறந்த எண்ணெய், எரிவாயு, வளங்கள் அமெரிக்காவிடம் உள்ளன எனத் தெரிவித்தார்.
கனடா நாட்டிற்குத்தான் அமெரிக்காவின் உதவி தேவை என குறிப்பிட்ட அவர், எமக்கு அவர்கள் தேவையில்லை என வலியுறுத்தினார்.
பல ஆண்டுகளாக கனடா அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி வருகின்றது எனவும் Donald Trump மீண்டும் குற்றம் சாட்டினார்.
தவிரவும் Ontario ஏரியின் பெயர் மாற்றத்தை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
இந்தப் பெயர் மாற்றத்திற்கு இரு நாட்டு அரசியல்வாதிகள், நிறுவனங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும், “அமெரிக்க மக்கள் இந்த மாற்றத்தை விரும்புகிறார்கள்” என குறிப்பிட்ட Donald Trump, நாட்டின் நலனுக்காக இதைச் செய்தேன்” என கூறினார்
கனடா, அமெரிக்கா இடையே உருவாகியுள்ள இந்த கடுமையான வர்த்தகப் போர் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய கருத்துகள் வெளியாகின.
