Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
மீண்டும் எழுந்துள்ள பொது வாக்கெடுப்பு குறித்த விவாதங்கள், அமெரிக்காவின் வர்த்தக அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட தீவிரமான சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்தத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கிறது.
Québec முதல்வர் Christine Fréchette, சட்டமன்றத்தைக் கலைத்து தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்காக வியாழன் காலை துணை ஆளுநரைச் சந்தித்தார்.
Quebec மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது என கூறிய Quebec துணை ஆளுநர் Manon Jeannotte, வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Quebec வாக்காளர்கள் 127 தொகுதிகளில் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள்.
மாகாணத்தின் அடுத்த முதல்வராக வெற்றி பெற ஐந்து முக்கிய கட்சித் தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தமது தேர்தல் பிரச்சாரங்களை வியாழனன்று ஆரம்பிக்கவுள்ளனர்.
Coalition Avenir Québec தலைவர் Christine Fréchette, Quebec Liberal தலைவர் Charles Milliard, Parti Québécois தலைவர் Paul St-Pierre Plamondon, Québec Solidaire தலைவர் Ruba Ghazal, Quebec Conservative தலைவர் Éric Duhaime ஆகியோர் இந்தத் தேர்தலில் தமது கட்சிகளை வழி நடத்துகின்றனர்.
கடந்த எட்டு ஆண்டுகளில், François Legault தலைமையிலில்லாத ஒரு அரசாங்கத்தை Quebec வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
Québec Solidaire கட்சி 11 ஆசனங்களுடனும், நிச்சயமற்ற தன்மையுடனும் தேர்தல் பிரச்சாரத்தை எதிர்கொள்கிறது.
Québec Conservative கட்சி அதிகாரப்பூர்வக் கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்காக, இந்தத் தேர்தலில் குறைந்தது 12 ஆசனங்களை வெல்ல முயன்று வருகின்றது.
இதுவரை எட்டு Liberal கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர் அல்லது நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் Parti Québécois கட்சி 30 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என இறுதியாக வெளியான கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
அதே கருத்துக்கணிப்பு Liberal, Coalition Avenir Québec ஆகிய கட்சிகள் தலா 23 சதவீத ஆதரவுடன் சமநிலையில் உள்ளதாகத் தெரிவிக்கிறது.
தேசிய அவையில் Coalition Avenir Québec கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய 2018, 2022 ஆகிய ஆண்டுகளின் தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து, இந்தத் தேர்தல் பிரச்சாரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
Doanld Trump, பொது வாக்கெடுப்பு விவாதங்கள் இந்தத் தேர்தலின் முடிவைக் கணிப்பதைக் கடினமாக்குகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆங்கில மொழி விவாதம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் வாக்கெடுப்பு October 5 நடைபெறவுள்ளது.
