அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள புதிய 50 சதவீத வரிகள், கனடா மீதான ஒரு பொருளாதார “தாக்குதலுக்கு” சமம் என பிரதமர் Mark Carney கூறுகிறார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இரத்து செய்வதாக வெள்ளிக்கிழமை (21) நள்ளிரவில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்து வெளியானது.
வர்த்தக ஒப்பந்தத்தை நிராகரிக்கும் கனடிய பிரதமர், புதிய சுங்க வரிகளுக்கு பதிலடி கொடுக்க உறுதியளித்தார்.
அமெரிக்கக் குழுவினர் இறுதி நேரத்தில் முன்வைத்த கோரிக்கைகள் பேச்சுவார்த்தை முறிவுக்குக் காரணம் எனவும், அமெரிக்காவுடன் கனடா ஒரு பொருளாதார “போரில்” ஈடுபட்டுள்ளதாகவும் Mark Carney கூறுகிறார்.
தாக்குதலுக்கு உள்ளாகும் போது நீங்கள் போரில் இருப்பதாக உணர்வீர்கள் என கூறிய Mark Carney, “நாங்கள் தாக்குதலுக்கு உள்ளானோம்” என சனிக்கிழமை (22) செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.
அமெரிக்காவின் புதிய வரிகளுக்குப் பதிலடியாக விதிக்கப்படும் வரிகள் September 8-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் Mark Carney கூறினார்.
இந்த வரிகள் கனேடியர்களுக்கு “செலவுகளை அதிகரிக்கும் எனவும், தெரிவுக்கான வாய்ப்புகளைக் குறைக்கும்” என்பதை பிரதமர் சனியன்று ஒப்புக் கொண்டார்.
பல வாரங்களாக நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், கனடாவும் அமெரிக்காவும் இறுதி நேர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதில் தோல்வியடைந்தன.
கனடாவும் அமெரிக்காவும் வெள்ளி இரவு தனித்தனி அறிக்கைகள் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டன.
இதன் காரணமாக கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத புதிய வரிகள் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளன.
“எங்கள் தொழிலாளர்கள், வணிகங்களை பாதுகாப்பதற்காக, அந்த வரிகளுக்கு ஈடாக அதே அளவுக்கு பதிலடி கொடுக்க கனடா திட்டமிட்டுள்ளது” என பிரதமர் Mark Carney கூறுகிறார்.
அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகளில் இறுதி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் நியாயமற்றதாகவும், பொருளாதார ரீதியாக பொருத்தமற்றதாகவும் இருந்தன என குறிப்பிட்ட கனடிய பிரதமர், அது எந்தவொரு ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கின எனவும் மேலும் குறிப்பிடுகிறார்.
இதற்கிடையில், தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer “நழுவவிடப்பட்ட வாய்ப்பு” என குறிப்பிட்டார்.
