Edmonton நகர சீக்கிய கோயிலில் இருவர் கத்தியால் குத்தப்பட்டனர்.
நகரின் வடகிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள சீக்கிய கோயிலில் வெள்ளிக்கிழமை (21) காலை இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.
சீக்கிய கோவிலில் நடைபெற ஏற்பாடாகி இருந்த திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர்கள் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
வன்முறைப் பின்னணி கொண்டவரும் சிறையிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவருமான ஒருவரால் இருவர் கத்தியால் குத்தப்பட்டனர்.
சம்பவ இடத்தில் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுக்கு 75, 51 வயதுடைய இரு ஆண்களுக்கு அவசர மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்ததை காவல்துறை உறுதிப்படுத்தியது.
அந்த இருவரின் உடல் நிலையும் சீராக இருப்பதாக கருதப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
இதில் சந்தேகத்தின் பேரில் Edmonton காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
27 வயதான சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவாகாத நிலையில் அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.
சந்தேக நபர் தங்களுக்கு அறிமுகமானவர் என வெள்ளி மத்திய நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்ட காவல்துறையினர், அவர் “வன்முறை குற்றங்கள் தொடர்பான குறிப்பிடத்தக்க பின்னணியை” கொண்டவர் எனவும் கூறினர்.
இந்தத் தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிய காவல்துறையில் தொடர் விசாரணையை முன்னெடுக்கின்றனர்.
இந்த விசாரணையில் உதவ Edmonton காவல்துறையின் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு பயங்கரவாத தாக்குதலா என்ற முடிவை எடுக்கவோ அல்லது வேறு ஏதேனும் தாக்குதல்களுடன் இதனை ஒப்பிடவோ இது மிக ஆரம்பகட்ட நிலை என காவல்துறை தலைவர் Warren Driechel கூறினார்.
திருமணம் திட்டமிட்டபடியே நடைபெற்ற போதிலும் குறிப்பிட்ட கத்திக் குத்துச் சம்பவம் நிகழ்வுகள் மீது ஒருவிதமான மந்தமான சூழலை ஏற்படுத்தியது.
இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து சீக்கிய சமூகம் கவலை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கனடாவின் உலக சீக்கிய அமைப்பு கூறியது.
