கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்வதில் ‘மிக நெருக்கமாக’ உள்ளன என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுங்கவரி விதிப்புக்கான காலக்கெடு நெருங்கிவரும் நிலையில், கனடா-அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு நெருக்கமாகி வருகின்றனர்.
இரு தரப்பு வர்த்தக பிரதிநிதிகள் வியாழக்கிழமை (20) மீண்டும் சந்தித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதியினால் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாக இரு தரப்பினரும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்ய முயன்றனர்.
இரு தரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க ஜனாதிபதியை விடவும் ‘கடுமையாக’ நடந்து கொள்ள Mark Carney முயன்றதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி JD Vance கூறினார்.
ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தாங்கள் “மிக அருகில்” இருப்பதாக பல மணி நேரம் வியாழனன்று நீடித்த கூட்டத்தின் பின்னர் கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தச் சந்திப்பில் க் முதன்மை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் Janice Charette, அமெரிக்காவுக்கான கனடியத் தூதர் Mark Wiseman, கனடிய பிரதமரின் தலைமை அதிகாரி Marc-André Blanchard ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை (21) நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளுக்காக இவர்கள் Washington மாநிலத்தில் இரவு தங்க உள்ளதாக வர்த்தக அமைச்சரின் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா இறக்குமதி வரிகளை விதிப்பதற்கு முன்னதாக, ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளுக்கும் சனிக்கிழமை நள்ளிரவு வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்கு அனுமதிக்குமாறு அனைத்து மாகாணங்களின் முதல்வர்களிடம் பிரதமர் Mark Carney கேட்டுக்கொண்டதை, மாகாண முதல்வர்கள் உறுதிப்படுத்தினர்.
இதற்கு முதல்வர்கள் இணங்கி உள்ள போதிலும், கனடியர்கள் உள்நாட்டுத் தயாரிப்புகளை தொடர்ந்து கொள்வனவு செய்ய வேண்டும் என்ற வலியுறுத்தல் முதல்வர்கள் பலரினால் முன்வைக்கப்படுகிறது.
இதன் மூலம் அமெரிக்க மதுபான வகைகளை கனடியர்கள் நிராகரிக்க வேண்டும் என மறைமுகமாக முதல்வர்கள் வலியுறுத்துகின்றனர்.
