புதிய வரிகளைத் தவிர்க்க கனடா தனது பதிலடி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கூறியுள்ளார்.
கனடிய வர்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளை “ஆக்கபூர்வமானவை” என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer விவரித்தார்.
கனடா, அமெரிக்கா வர்த்தக பிரதிநிதிகள் இந்த வாரத்தில் இரண்டாவது தடவையாக வியாழக்கிழமை (13) சந்தித்தனர்.
இரு தரப்பு வர்த்தக பிரதிநிதிகள் சமீபத்திய வாரங்களில் நான்கு முறை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்புகளை “ஆக்கபூர்வமானவை” என Jamieson Greer வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார்.
ஆனால், புதிய சுங்க வரிகளை தவிர்க்க வேண்டுமாயின் கனடா தனது பதிலடி நடவடிக்கைகளை நீக்க வேண்டும் என அவர் கூறினார்.
அடுத்த வாரம் முதல் பல்வேறு கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கையெழுத்திட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக கனடிய அதிகாரிகள் தங்கள் அமெரிக்க இணையான அதிகாரிகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க மதுபானங்கள் மீதான மாகாண அளவிலான தடைகள் உட்பட கனடாவின் பதில் நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்த புதிய வரிகள் அமைகின்றதாக Donald Trump நிர்வாகம் கூறுகிறது.
அமுலுக்கு வரவுள்ள இந்த வரிகள், கனடா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு எதிர் வினையாகும் என Jamieson Greer வெள்ளியன்று கூறினார்.
அமெரிக்காவின் வர்த்தக கொள்கையில் கனடாவின் பேச்சுவார்த்தையாளர்கள் விரும்பாத அம்சங்கள் சில உள்ளன எனத் தெரிவித்த Jamieson Greer, கனடியர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
“இறுதியில் அமெரிக்காவிற்கு எது சிறந்ததோ அதையே செய்யப் போகிறோம்” எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி Donald Trump-பின் வர்த்தகக் கொள்கை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதிலேயே நாங்கள் முதன்மையாகக் கவனம் செலுத்தி வருகிறோம் எனவும் Jamieson Greer கூறினார்.
இரு தரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை Jamieson Greer வழங்கவில்லை.
ஆனால், கனடாவுடன் அமெரிக்கா பல தசாப்தங்களாக பெரிய அளவிலான வர்த்தகச் சிக்கல்களை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை குறித்து மாகாண, பிரதேச வர்த்தக அமைச்சர்கள், கனடா-அமெரிக்க உறவுகள் குறித்த பிரதமரின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc வெள்ளி பிற்பகல் தகவல்களை வழங்க உள்ளனர் என அமைச்சரின் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் ‘தொடர்வதாக’ அமைச்சர் Dominic LeBlanc வியாழனன்று தெரிவித்தார்.
இதில் எத்தனை சந்திப்புகள் தேவைப்படுகிறதோ அத்தனை சந்திப்புகளையும் நடத்துவோம் என Dominic LeBlanc இந்த சந்திப்பின் பின்னர் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
