கடந்த வார இறுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் Toronto நகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வீதித் திருவிழாக்களை தடுக்காது என நகர முதல்வர் கூறினார்.
“பொறுப்பற்ற” குற்றவாளிகள் Toronto வெளிப்புறத் தெருத் திருவிழா பாரம்பரியத்தை தடுத்து நிறுத்த தான் அனுமதிக்கப்போவதில்லை என அவர் கூறினார்.
கடந்த வார இறுதியில் Toronto நகரில் மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
நகரின் பல்வேறு பகுதிகளில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும், திறந்தவெளி வீதித் திருவிழாக்களை தொடர்ந்து நடத்தும் வழக்கத்தைக் கைவிட போவதில்லை என Toronto நகர முதல்வர் Olivia Chow தெரிவித்தார்.
கடந்த வார இறுதி நாட்கள் “கடினமானவை” என Olivia Chow சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை (11) Salsa on St. Clair என்ற பிரபலமான லத்தீன் தெருத் திருவிழா ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மோதலில் இருவர் கொல்லப்பட்டனர் – மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இதில் கொல்லப்பட்ட இருவரும் குறிவைக்கப்பட்டதாக Toronto காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மரணங்கள் Toronto நகரில் 2026-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 19-வது, 20-வது கொலைச் சம்பவங்களாகும்.
குறிப்பிட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக இரண்டு நாள் நடைபெறும் Salsa on St. Clair நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) இரத்து செய்யப்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை (10) Lawrence Avenue West – Jane Street பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் – இருவர் காயமடைந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் நம்புவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு விடுதிக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
Toronto நகர முதல்வரும், காவல் துறையினரும் பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு தொடர்பான தங்கள் அணுகுமுறைகளை நியாயப்படுத்தி உள்ளனர்.
இருப்பினும், தெரு விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதை உறுதிசெய்ய, காவல்துறை, நகர நிர்வாகம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இடையே கூடுதல் ஆலோசனைகளும் திட்டமிடலும் தேவை என்பதை இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் வலியுறுத்துவதாக Toronto காவல்துறைத் தலைவர் Myron Demkiw கூறினார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒருவரைக் கொல்லும் வகையிலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அனைத்தையும் முதல் நிலை கொலை குற்றச்சாட்டாக வகைப்படுத்துமாறு மத்திய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதால், Toronto காவல்துறைத் தலைவரின் கோரிக்கை குறித்து மத்திய நீதித்துறை அமைச்சர் Sean Fraser கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஆனாலும் மாறிவரும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப சட்டங்கள் இருப்பதை உறுதிசெய்ய, சட்ட அமுலாக்க துறையினருடன் இணைந்து மத்திய அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என அவரது அலுவலகம் கூறியது.
இந்த நிலையில் அதிகரிக்கும் துப்பாக்கி சூடு குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் பேசியுள்ளதாக Olivia Chow தெரிவித்தார்.
அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் Toronto நகருக்குள் வருவதைத் தடுப்பதற்கு அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
துப்பாக்கி வன்முறை குறித்த Toronto நகர முதல்வரின் கவலைகளை அமைச்சரும் பகிர்ந்து கொள்வதாக அவரது பேச்சாளர் கூறினார்.
“கனடா முழுவதும் உள்ள சமூகங்களைப் பாதுகாக்கவும், சட்டவிரோத துப்பாக்கிகளின் புழக்கத்தை தடுக்கவும், அமெரிக்காவுடன், நகராட்சி, மாகாண அளவிலான பங்காளர்களுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்,” எனவும் அவர் தெரிவித்தார்.
தெருத் திருவிழாக்களில் வன்முறை நிகழும் ஒரே கனடிய நகரம் Toronto மட்டுமல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, Vancouver தெரு விழாவின் போது, ஒருவர் வாகனத்தால் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
