ஈரானின் தாக்குதல்களிலிருந்து பாரசீக வளைகுடா நாடுகளை பாதுகாக்க கனடாவின் உதவி கோரப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா தலைமையிலான தாக்குதல் ஒரு பரந்த பிராந்தியப் போராக விரிவடையும் நிலையில், ஈரானின் தாக்குதல்களிலிருந்து பாரசீக வளைகுடா நாடுகளை பாதுகாக்க கனடாவின் உதவி கோரப்படலாம் என கனடிய ஆயுதப் படைகளின் தலைவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (05) ஆஸ்திரேலியாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, Mark Carney ஒரு கேள்விக்கு பதிலளித்ததிலிருந்து ஈரான் யுத்தத்தில் கனடாவின் சாத்தியமான ஈடுபாடு குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
கனடாவின் நட்பு நாடுகள் உதவி கோரினால், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பங்கேற்பதை கனடிய பிரதமர் மறுக்கவில்லை.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கனடா இணைவதை கனடிய பிரதமர் முற்றாக நிராகரிக்க மறுத்திருந்தார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கனடா பங்கேற்காது என உறுதியாகக் கூறுவாரா என ஆஸ்திரேலியாவில் பயணத்தில் உள்ள கனடிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த Mark Carney, இராணுவ “பங்கேற்பை ஒருபோதும் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது” என கூறினார்.
“அது அர்த்தமுள்ளதாக இருந்தால், நாங்கள் எங்கள் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கனடா “எப்போதும் கனடியர்களை பாதுகாக்கும்” எனத் தெரிவித்த Mark Carney, எங்கள் நட்பு நாடுகள் கோரும் போது நாங்கள் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் எனவும் உறுதிப்படுத்தினார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் ஆரம்பித்த ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுத் தாக்குதலில் கனடா பங்கேற்கவில்லை என்பதை கனடிய பாதுகாப்பு பணியாளர்களின் தலைவரான ஜெனரல் Jennie Carignan தெளிவுபடுத்தினார்.
ஆனாலும் வளைகுடா நாடுகளின் நிலைமை மிகவும் மோசமானது, ஆபத்தானது என அவர் வலியுறுத்தினார்.
கொந்தளிப்பான பிராந்தியத்திலிருந்து கனடியர்களை வெளியேற்ற உதவவும் கனடிய இராணுவம் அழைக்கப்படலாம் எனவும் Jennie Carignan கூறினார்.
இந்த நிலையில் மத்திய கிழக்கில் கனடாவின் எந்த ஒரு இராணுவ பங்கேற்பும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என Conservative கட்சி தெரிவிக்கின்றது.
இந்த மோதலில் எமது துருப்புக்களை ஈடுபடுத்தப் போகின்றோமா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பது நாடாளுமன்றத்தையே சார்ந்தது என Conservative பாதுகாப்பு விமர்சகர் James Bezan தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக ஈரான் குறித்து முற்றிலும் பொருத்தமற்ற நிலைப்பாட்டை Mark Carney கொண்டிருப்பதாக Conservative வெளியுறவு விமர்சகர் Michael Chong குற்றம் சாட்டினார்.
