September 14, 2026
தேசியம்
செய்திகள்

சீனாவுடன் உறவுகளை மீண்டும் புதுப்பிக்க முயலும் கனடா?

சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் புதுப்பிக்க கனடிய அரசாங்கம் முன் முயற்சிகளை எடுத்து வருகிறது.

Mark Carney சீனாவுடன் ஒரு மூலோபாய உறவைத் தொடர விரும்புகிறார் என ஒரு மூத்த கனடிய அதிகாரி வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.

கனடிய பொருளாதாரம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஏற்பாடுகளை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மீது உள்ளது எனவும் அந்த அதிகாரி கூறினார்.

கனடாவின் முதல் இரண்டு வர்த்தக பங்காளிகளில் சீனாவும் ஒன்றாகும்.

தென்கொரியாவில் அடுத்த வாரம் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில் கனடிய பிரதமர், சீன ஜனாதிபதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி Xi Jinping-குடன் Mark Carney தனிப்பட்ட நேரடி சந்திப்புக்கான முயற்சிகள் தொடர்வதாக கனடிய அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்த சந்திப்பு அமையும் சாத்தியக்கூறு உள்ளது.

முன்னாள் பிரதமர் Justin Trudeau பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த குற்றசாட்டுகள் காரணமாக கனடாவுக்கு சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் உளவு பார்த்தல், வெளிநாட்டு தலையீடுகள் குறித்த குற்றசாட்டுகள் குறித்த கனடாவின் கவலைகளுடன் தொடர்புடைய ஊடக கசிவுகள் குறித்து G20 மாநாட்டின் போது சீன ஜனாதிபதி, கனடிய பிரதமரை கண்டித்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதனை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் என குறிப்பிட்ட மூத்த கனடிய அரசாங்க அதிகாரி, கனடாவுக்கு இப்போது ஒரு புதிய பிரதமர் இருக்கிறார் என்பதை மீண்டும் நினைவுபடுத்தினார்.

அமெரிக்காவுடன் இணைந்து கனடா, சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் (EVs) மீது 100 சதவீத வரிகளை விதித்ததைத் தொடர்ந்து இரு தரப்பு வர்த்தக பதட்டங்கள் அதிகரித்தன.

சீனாவின் இரும்பு, அலுமினியம்  போன்ற இறக்குமதிகள் மீது மீதும் கனடா 25 சதவீத வரிகளை விதித்தது.

பதிலுக்கு கனடிய விவசாய இறக்குமதிகள் மீது சீன அரசாங்கம் 100 சதவீத வரிகளை விதித்தது.

இந்தப் பழிவாங்கல் பதில் நடவடிக்கை கனடாவின் மேற்கு Prairie மாகாணங்களில் தொழில்துறையை முடக்கியுள்ளது.

சீன மின்சார வாகனங்களுக்கான வரிகளை கனடா இரத்து செய்தால், கனடிய விவசாயம் மீதான அதன் வரிகளை நீக்க தயாராக இருப்பதாக கனடாவுக்கான சீனத் தூதர் Wang Di அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை தூதுவருக்கு மதிப்பளித்தமைக்கு மன்னிப்பு கோரியது கனடா கந்தசாமி ஆலயம்

Lankathas Pathmanathan

Conservative அதிகார சபை அங்கத்தவர் கட்சியை விட்டு வெளியேறினார்

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பார்த்தி கந்தவேள்

Lankathas Pathmanathan

Leave a Comment