கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குற்றச்சாட்டில் கனடிய தமிழருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அனலைதீவில் தங்கியிருந்த கனடியத் தம்பதியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய வழக்கில் கனடிய தமிழருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2023 -ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்த நிலையில், இந்தத் தாக்குதலுக்கு திட்டமிட்ட பிரதான சந்தேக நபர் கனடாவைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் அறிக்கையிட்டிருந்தனர்.
இந்த விசாரணையில் ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம் குறிப்பிட்ட கனடிய தமிழருக்கு எதிராக கடந்த வாரம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த கனடிய தமிழர் தம்பிராஜா கந்தையா என ஸ்ரீலங்கா காவல்துறையின் உதவி கண்காணிப்பாளர் தேசியத்திடம் உறுதிப்படுத்தினர்.
இந்த சந்தேக நபர் கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய நிர்வாக சபையின் முன்னாள் தலைவர் என தெரியவருகிறது.
வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அதற்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது.பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தம்பிராஜா கந்தையா கைது செய்யப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கனடிய தமிழர்களான நாகலிங்கம் சுப்பிரமணியம் தம்பதியினர் 2023-ஆம் ஆண்டு February 23ம் திகதி நள்ளிரவு பொழுதில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நிகழ்ந்தது. இவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் உட்புகுந்த 3 பேர் அடங்கிய குழு அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் பணம், கடவுச்சீட்டு உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதல் குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதானார். கனடாவில் உள்ள ஐயப்பன் ஆலயம் ஒன்றின் தலைவரின் வழிநடத்தலில் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக கைதான பெண் காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் அவர் காவல்துறையில் சமர்ப்பித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் கனடிய தமிழரான தம்பிராஜா கந்தையாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய குருசாமியும், போசகருமான நாகலிங்கம் சுப்பிரமணியம் தம்பதியினர் மீதான தாக்குதல் நடைபெற்ற சில தினங்களில் அதனை கண்டித்து கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. கனடிய அரசும், இலங்கை காவல்துறையும் இணைந்து இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பினரிடமிருந்து முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
——
தொடர்புபட்டவை:
இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு
கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்
கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம் – தேசியம்
கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது?
கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது? – தேசியம்
