தேசியம்
செய்திகள்

புதிய அமைச்சரவையில் தற்போதைய அமைச்சர்கள் பலர் இடம் பிடிக்க மாட்டார்கள்?

வெள்ளிக்கிழமை (14) பதவி ஏற்கும் புதிய அமைச்சரவையில் தற்போதைய அமைச்சர்கள் பலர் இடம் பிடிக்க மாட்டார்கள் என தெரியவருகிறது.
பிரதமராக பதவி பிரமாணம் செய்யவுள்ள Mark Carney புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளார்.
இது பதவி விலகும் பிரதமர் Justin Trudeau விட்டுச் செல்லும் அமைச்சரவையை விட கணிசமாக சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுச் சேவைகள், கொள்முதல் அமைச்சர் Jean-Yves Duclos, குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marc Miller, சுகாதார அமைச்சர் Mark Holland உள்ளிட்டவர்கள் இந்த அமைச்சரவையில் இடம் பிடிக்க மாட்டார்கள் என தெரியவருகிறது.
மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்த அமைச்சர்கள், Mark Carney அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் அனைத்துலக வர்த்தக அமைச்சர் Mary Ng, நீதியமைச்சர் Arif Virani, கனடிய பாரம்பரிய அமைச்சர் Pascale St-Onge, அவசர கால தயார் படுத்தல் நிலை அமைச்சர் Harjit Sajjan, விவசாய அமைச்சர் Lawrence MacAulay, பெண்கள், பாலின சமத்துவம், இளைஞர் அமைச்சர் Marci Ien, கிராமப்புற பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் Gudie Hutchings ஆகியோரும் அடங்குகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பின் வரி கட்டணங்களை நிர்வகிப்பதில் முக்கிய இலாகாக்களை கொண்டுள்ள முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்தும் அமைச்சர் பதவிகளை வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் நிதி அமைச்சர் Dominic LeBlanc, வெளியுறவு அமைச்சர் Melanie Joly, தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne, பொது பாதுகாப்பு அமைச்சர் David McGuinty ஆகியோர் மீண்டும் அமைச்சு பதவிகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் என்ன அமைச்சு பதவிகள் இவர்களுக்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த அமைச்சரவையில் தமிழரான கரி ஆனந்தசங்கரி, நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும்  பதவியேற்பார் என தேசியம் உறுதிப்படுத்தியது.
முன்னாள் அமைச்சர்களும் Liberal கட்சியின் தலைமைப் போட்டியாளர்களுமான Chrystia Freeland, Karina Gould ஆகியோர் புதிய அமைச்சரவையில் பங்கேற்பார்களா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
இந்த பதவியேற்பு வைபவம் வெள்ளி காலை 11 மணியளவில் ஆளுநர் நாயகம் Mary Simon முன்னிலையில், அவரது உத்தியோகபூர்வ வாசல் தலமான Rideau Hall இல் நடைபெற உள்ளது.
முன்னதாக வெள்ளி காலை பிரதமர் Justin Trudeau ஆளுநர் நாயகத்தை தனிப்பட்ட முறையில் சந்திப்பார். 
இந்தச் சந்திப்பில், அவர் உத்தியோகபூர்வமாக பதவி விலகி, Mark Carney-யை அரசாங்கத்தை அமைக்கவும் ஒரு புதிய அமைச்சரவையை அறிவிக்கவும் ஆளுநர் நாயகத்திடம் பரிந்துரைப்பார்.
அதன் பின்னரே புதிய பிரதமராக Mark Carney பதவியேற்பார்.
புதிதாக பதவியேற்கும் Mark Carney-யும் அவரது அமைச்சரவையும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் March 24 அன்று மீண்டும் கூடுவதற்கு முன்னதாக ஒரு தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontario சட்டமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Gaya Raja

தடுப்பூசி பெறாத உறுப்பினர்களை பதவி விலத்தும் கனடிய இராணுவம்

Lankathas Pathmanathan

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை June 25

Lankathas Pathmanathan

Leave a Comment