மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த விபத்தில் தமிழரான Oshawa நகரைச் சேர்ந்த ஜெய்வின் கிருபானந்தனுக்கு 6.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தவறான திசையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்ற சம்பவத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில் நேருக்கு நேர் வாகனங்கள் மோதியதில் மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெய்வின் கிருபானந்தனுக்கு ஆறு ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
New Market நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் புதன்கிழமை (25) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி Ann Marina Elias பிறப்பித்த இந்த உத்தரவில், சிறைத்தண்டனையுடன் 12 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடையும், காவல்துறையிடம் DNA மாதிரியை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் Toronto நகருக்கு வடக்கே 50 KM தொலைவில் உள்ள Whitchurch-Stouffville நெடுஞ்சாலை 48-ல் இந்த விபத்து நிகழ்ந்தது.
அப்போது 18 வயதாக இருந்த ஜெய்வின் கிருபானந்தன் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட மணிக்கு 60 KM கூடுதல் வேகத்தில் எதிர்த் திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்று, 35 வயதான Andrew Cristillo-வின் குடும்ப வாகனம் மீது நேருக்கு நேர் மோதினார்.
இந்த விபத்தில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்ததில் Andrew Cristillo சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மனைவி, மூன்று இளம் மகள்களும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிய ஜெய்வின் கிருபானந்தன், மறுநாள் காலை சுமார் 150 KM தொலைவில் கைது செய்யப்பட்டார்.
இவர் உருளைக்கிழங்கு வயலில் பதுங்கியிருந்த போது காவல்துறையின் வெப்பப் படமெடுக்கும் drone (Thermal imaging drone) மூலம் கண்டுபிடிக்கப்பட்டார்.
விசாரணையின் போது ஆரம்பத்தில் தான் வாகனத்தை ஓட்டவில்லை எனவும் அவர் பொய் கூறியிருந்தார்.
பின்னர் மரணத்தை விளைவிக்கும் வகையில் அபாயகரமாக வாகனம் ஓட்டியது, விபத்து நடந்த இடத்தில் நிற்காமல் தப்பியோடியது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் அவரது இளமை வயது, முந்தைய குற்றப் பின்னணி இல்லாததைக் கருத்தில் கொண்டு அவருக்கு 6.5 ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிபதி, ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தைக் கழித்து இன்னும் நான்கரை ஆண்டுகள் அவர் சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஆனாலும் இந்த வழக்கில் நீதி அமைப்பு சரியாக செயல்படவில்லை என Andrew Cristillo குடும்பத்தினர் தீர்ப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்தத் தண்டனை எந்த வகையிலும் நியாயமானதாக இல்லை என் கூறிய அவரது சகோதரர் Jordan Cristillo, எமது நீதி அமைப்பு செயல்படவில்லை என்பதற்கான ஆதாரம் இது என கூறினார்..
இதனை ஒரு சாதாரண விபத்தாக பார்க்கக் கூடாது என செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், இதை ஒரு கொலையாகவே கருத வேண்டும் எனவும் ஜெய்வின் கிருபானந்தன் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் எனவும் வேதனையுடன் கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, Ontario அரசு Andrew Cristillo பெயரில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி அபாயகரமாக வாகனம் ஓட்டுவதனால் மரணம் விளைவிப்பவர்களுக்கு வாழ்நாள் ஓட்டுநர் உரிமத் தடை உட்பட்ட விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விபத்து நடப்பதற்கு முன்பாக, கடந்த வருடம் January மாதம் நெடுஞ்சாலை 401-ல் Ontario முதல்வர் Doug Ford பயணித்த காவல்துறை வாகனத்தின் மீது மோதிய மற்றொரு அபாயகரமான வாகனம் ஓட்டுதல் வழக்கையும் ஜெய்வின் கிருபானந்தன் எதிர்கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது
