Toronto-வின் Casa Loma பகுதியில் வீடொன்றுக்குள் நிகழ்ந்த அத்துமீறல் துப்பாக்கிச் சூட்டில் 39 வயதான இசைக்கலைஞர் ஒருவர் பலியானார்.
இதில் பலியானவர் குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளரின் மகன் என தெரியவருகிறது.
புதன்கிழமை (25) அதிகாலை பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பலியானவர் 39 வயதான இசைக்கலைஞர் Michael Eckert என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
St. Clair Avenue and Avenue Road பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வீட்டில் அதிகாலை 2:30 மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தேக நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும், அப்போது வீட்டில் இருந்த Michael Eckert அவர்களை எதிர்கொண்ட போது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Michael Eckert சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் போது வீட்டில் மேலும் மூன்று பேர் இருந்த போதிலும், அவர்களுக்கு எந்தவிதமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணை தொடர்கிறது.
இதில் சந்தேக நபர்கள் குறித்த அடையாளங்களும் வெளியிடப்படவில்லை.
இந்தக் குடும்பம் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை எனக் கூறிய காவல்துறை அந்தப் பகுதியில் வாழும் குடியிருப்பாளர்களிடம் விபரங்களை சேகரிக்கும் பணியை தொடர்கின்றனர்.
பிரபலமான guitar கலைஞரான Michael Eckert மறைவுக்கு இசைக்கலைஞர்கள பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கனடிய இசை உலகின் மிகவும் நேசிக்கப்பட்ட கலைஞரை நாம் இழந்துவிட்டோம் என அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில் Toronto நகரம் முழுவதும் வீடுகளில் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் குடியிருப்பாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக அந்தப் பகுதியின் நகரசபை உறுப்பினர் Josh Matlow தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் Bridle Path பகுதியில் வீடொன்றுக்குள் மூன்று மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுடப்பட்ட சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாக அரங்கேறியுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் Toronto காவல்துறையில் 111 வீட்டு அத்துமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 29 சதவீதம் அதிகமாகும்.
இத்தகைய குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்ட சீர்திருத்தங்களை காவல்துறை வலியுறுத்தி வருவதாக Toronto காவல்துறைத் தலைவர் Myron Demkiw தெரிவித்துள்ளார்.
வீடுகள், பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதாக குறிப்பிட்ட அவர், இதில் குற்றவாளிகளின் நோக்கம் குறித்து விவாதிப்பதை நிறுத்திவிட்டு, இத்தகைய குற்றங்களை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
