Stellantis – Roshel விற்பனை குறித்து ஆலோசிக்க அமைச்சர் Mélanie Joly வியாழக்கிழமை (12) Toronto-வில் முக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்கிறார்.
Brampton நகரில் உள்ள Stellantis வாகன உற்பத்தித் தொழிற்சாலையை வாகனத் தயாரிப்பு நிறுவனமான Roshel நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க மத்திய தொழில்துறை அமைச்சர் Mélanie Joly முக்கிய நான்கு தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுக்கிறார்.
இந்த முக்கியக் கூட்டத்தில் அமைச்சர் Mélanie Joly, வாகன உற்பத்தி நிறுவனமான Stellantis பிரதிநிதிகள், கனடாவில் உள்ள 9,000-க்கும் மேற்பட்ட Stellantis தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Unifor தொழிற்சங்கம், Ontario மாகாண அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
2023 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ள Brampton தொழிற்சாலையை, கனடிய கவச வாகனத் தயாரிப்பு நிறுவனமான Roshel நிறுவனத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக Stellantis நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.
இதனால், கடந்த 2023 முதல் தற்காலிகப் பணி நீக்கத்தில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தொழிற்சாலையை விற்பனை செய்வது தொடர்பாக Roshel நிறுவனத்துடன் Stellantis புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து, கடந்த September மாதம் Stellantis – Unifor தொழிற்சங்கத்திற்கு இடையிலான கூட்டுப் பேரம் பேசும் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.
இந்த விற்பனை ஒப்பந்தத்தை “மிக மோசமான சூழ்நிலை” எனக் குறிப்பிட்டுள்ள Unifor தேசியத் தலைவர் Lana Payne, “Stellantis நிறுவனம் தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கைவிட்டு, இரகசிய ஒப்பந்தம் மூலம் எமது உறுப்பினர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்த விற்பனை ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் Mélanie Joly ஈடுபட்டதாக வெளியான ஊடக செய்திகளை அவரது அலுவலகம் புதன்கிழமை (11) மறுத்துள்ளது.
அமைச்சர் ஒருபோதும் Roshel நிறுவனத்தைச் சந்திக்கவில்லை எனவும் அவரது அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேவேளையில், “Stellantis நிறுவனம் தனது ஒப்பந்த விதிகளை மீறியுள்ளது என கூறியுள்ள Mélanie Joly, தொழிலாளர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர மத்திய அரசு சட்டத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Stellantis நிறுவனத்துடனான ஒப்பந்தம் கனடிய வாகனத் துறை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட “துரோகம்” என்ற பிரதமர் Mark Carney கூறியுள்ளார்.
இந்த நிலையில் முக்கிய நான்கு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
