Brampton நகர Stellantis வாகன தொழிற்சாலை விற்பனை விடயத்தில் கனடிய அரசின் நிலைப்பாட்டை பிரதமர் Mark Carney மீண்டும் தெளிவுபடுத்தினார்.
Stellantis வாகன உற்பத்தித் தொழிற்சாலையை Roshel நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம் குறித்து கனடிய மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, Stellantis நிறுவனம் மீதான தனது கடுமையான விமர்சனங்களை பிரதமர் Mark Carney தற்காத்துப் பேசியுள்ளார்.
அயர்லாந்து தலைநகரில் நடைபெறும் ஐரோப்பிய அரசியல் சமூக உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் வியாழக்கிழமை (12) இந்த விடயம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
Brampton தொழிற்சாலையை Roshel நிறுவனத்திற்கு விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருந்தது எனவும், இறுதியில் அந்த ஒப்பந்தத்திற்கு தடையாக நிற்கவில்லை எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் ஊடகங்கள் கண்டறிந்துள்ளது.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்து அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பிரதமர் Mark Carney பதிலளிக்கவில்லை.
ஆனாலும் Stellantis நிறுவனத்துடனான ஒப்பந்தம் கனடிய வாகனத் துறை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட “துரோகம்” என்ற தனது முந்தைய கருத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
Roshel நிறுவனத்துடனான Stellantis நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம் ஒரு பகுதியளவு தீர்வே தவிர, அனைத்து தொழிலாளர்களுக்குமான முழுமையான தீர்வு அல்ல எனவும் Mark Carney திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Stellantis நிறுவனம் மத்திய, மாகாண அரசுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றாததால், இந்த விற்பனைக்கு எதிரான அரசின் சட்டப் போராட்டங்கள் தொடரும் எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் Roshel நிறுவனத்துடனான விற்பனை ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதிலோ அல்லது பேச்சுவார்த்தை நடத்துவதிலோ தொழில்துறை அமைச்சர் Melanie Joly-க்கு எந்தப் பங்கும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
