தேசியம்
செய்திகள்

Mississauga பல்கலைக்கழக விடுதியில் துப்பாக்கிச்சூடு: 19 வயது இளைஞர் மரணம், SIU விசாரணை!

Toronto பல்கலைக்கழகத்தின் Mississauga வளாகத்தில் (UTM) உள்ள மாணவர் விடுதியில் திங்கட்கிழமை (02) இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக Ontario  காவல்துறை கண்காணிப்பு அமைப்பான சிறப்புப் புலனாய்வு பிரிவு (SIU) விசாரணையை ஆரம்பித்துள்ளது.

திங்கள் இரவு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கும் விடுதி பகுதியில் ஆபத்தான ஆயுதங்களுடன் நபர் ஒருவர் இருப்பதாக Peel பிராந்திய காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மாணவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டு, அந்த விடுதி வளாகம் அவசரமாக வெளியேற்றப்பட்டது.

காவல்துறையினர் சம்பவ இடத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற போது, அந்த விடுதி அறையின் உள்ளே இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

காவல்துறையினர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்தது.

பின்னர் காவல்துறையினர் அறைக்குள் நுழைந்த போது, அந்த நபர் துப்பாக்கி காயத்துடன் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

இதில் உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் எனவும், அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் அல்ல எனவும் SIU உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனாலும் அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

திங்கள் மதியம் Brampton நகரில் பெண் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் அந்த இளைஞரை தேடிய காவல்துறையினர், அவரை இந்த விடுதிப் பகுதியில் கண்டுபிடித்தபோது இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில் மாணவர்கள் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் துப்பாக்கிச் சூடு நடவடிக்கையால் விடுதியில் தங்கியிருந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகினர்.

மாணவர்களின் நலம், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, செவ்வாய்க்கிழமை (03) பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளும் இரத்து செய்யப்படுவதாக UTM நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகளும் மருத்துவ ஆதரவும் உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுத் தேர்தலில் பசுமை கட்சியின் வேட்பாளராக தமிழர்

Lankathas Pathmanathan

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட Manitoba முதல்வர்

Lankathas Pathmanathan

வரலாறு காணாத வெப்பம்: கனடாவில் இந்த ஆண்டு குளிர்காலம் இருக்காது?

Lankathas Pathmanathan

Leave a Comment