Toronto Bridle Path குடியிருப்பில் அரங்கேறிய வீடுடைப்பு அத்துமீறல் கொள்ளைச் சம்பவத்தின் போது, துப்பாக்கி ஏந்திய நபர்களால் ஒரு தந்தை, அவரது இரண்டு மகள்கள் சுடப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.
இதில் வீட்டில் இருந்த குடும்பத்தின் தாய் ஆயுதக் கும்பலால் சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் செல்வந்தர்களும், பிரபலங்களும் வசிக்கும் Bayview and Lawrence பகுதியில் வியாழக்கிழமை (29) அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
வீட்டினில் நள்ளிரவைத் தாண்டி அத்துமீறிய ஆயுதக் கும்பல் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிநவீன துப்பாக்கிகளுடன் சென்ற ஒரு கும்பல், Bridle Path பகுதியில் உள்ள பிரம்மாண்ட ஆடம்பர வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக அத்துமீறி நுழைந்துள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் அவர்களை தடுக்க முயன்ற போது, அக்கும்பல் குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதில் அந்த வீட்டின் குடும்பத் தலைவரான தந்தை, தாய், அவர்களின் இரண்டு இளம் மகள்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் அயலவர்களினால் அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இதில் காயமடைந்த நால்வரும் உடனடியாக மீட்கப்பட்டு Toronto பிராந்திய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விரிவான தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதில் சந்தேக நபர்கள் குறித்த எவ்வித துல்லியமான அடையாள விவரங்கள் இதுவரை காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவத்தில் மொத்தம் 3 நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என முதற்கட்ட புலனாய்வில் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்கள் மூவரும் தங்களின் முகங்களை முழுமையாக முகமூடிகளால் மறைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வன்முறையின் பின்னர் அக்கும்பல் சம்பவ இடத்திலிருந்து ஒரு SUV ரக சொகுசு வாகனத்தில் தப்பியோடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்தக் குடியிருப்பு பகுதி முழுவதும் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய ஆயுதக் கும்பலை அடையாளம் காண, அப்பகுதியிலுள்ள CCTV ஒளிப்பதிவுகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
