கனடிய வெளிவிவகார திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பு தலைநகர் Ottawa-வில் உள்ள கனடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் தலைமையகத்தில்வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது.
கனடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் சிவஞானம் சிறீதரன் கனடாவுக்கான உத்தியோகபூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த விசேட சந்திப்பில் கனடிய வெளிவிவகார திணைக்களத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கான உதவி பிரதி அமைச்சர் Weldon Epp, இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் Deirdre Ukich , மூத்த அதிகாரி Ariel Sopuck ஆகியோர் கனடியத் தரப்பில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில் சிவஞானம் சிறீதரன் தலைமையில் பிரதிநிதிகள் இலங்கையின் கள நிலவரங்களை கனடிய அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் அரசியல், சமூக, வாழ்வாதார நெருக்கடிகள் குறித்து இச்சந்திப்பில் ஆழமாக விவாதிக்கப்பட்டது.
மனித உரிமை மீறல்கள், செம்மணி சர்வதேச தடயவியல் விசாரணை, நில ஆக்கிரமிப்பு , திட்டமிட்ட குடியேற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த சந்திப்பில் கனடிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளையும் மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்த கனடிய அதிகாரிகள், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகள், அரசியல் தீர்வு விவகாரங்களில் கனடா எப்போதும் தனது கவனத்தைச் செலுத்தி வரும் என உறுதியளித்தனர்.
இதற்கு முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகளைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
