அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கனடிய அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக தலையிடுவதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
கனடா – அமெரிக்கா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு புதன்கிழமை (21) வெளியானது.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அதிரடி வரி விதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடியப் பிரதிநிதிகள் சிலர், அமெரிக்க எல்லையோர மாகாணங்களில் உள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதாக அமெரிக்கத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
தலைநகர் Ottawa-வில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இந்த குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அரசியலில் செல்வாக்கு செலுத்த கனடிய அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறி, அதற்கு ஆதாரமாக அவர்களின் பேச்சுக்கள் அடங்கிய பட்டியலை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், கனடிய தொழில்துறை அமைச்சர் Melanie Joly பேச்சுக்கள் மட்டும் 5 முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அமெரிக்கா விதித்த வர்த்தக வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பது, குறிப்பிட்ட அமெரிக்க மாநிலங்களை இலக்கு வைப்பது குறித்து அமைச்சர் Melanie Joly பேசிய கருத்துக்கள், எந்த ஒரு சூழல் விளக்கமும் இன்றி (Context-free) இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
கனடிய அரசியல்வாதிகள் சிலர் தங்களின் கருத்துக்கள், பிரச்சாரங்கள் மூலம் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்படுகின்றனர் என கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் Pete Hoekstra தெரிவித்தார்.
அமெரிக்கத் தூதரகத்தின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டு வெளியான சில மணி நேரங்களில், இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர்.
இந்த உரையாடல் “சற்று நீண்ட நேரம்” நிகழ்ந்ததாக கனடிய பிரதமர் Mark Carney உறுதிப்படுத்தினார்.
இந்த தொலைபேசி உரையாடலில் தேர்தல் தலையீடு குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தகப் போர், வரி விதிப்பு சிக்கல்கள் குறித்து இரு நாட்டின் தலைவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.
இந்த நிலையில் கனடிய அரசியல் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து தங்கள் வாதங்களை முன்வைத்தனர்:
அமெரிக்கத் தூதரகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் Mark Carney செய்தியாளர் சந்திப்பில் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
ஆனாலும் கனடாவுக்கு எதிரான இந்த வர்த்தகப் போரையும், வரி விதிப்புகளையும் முதலில் ஆரம்பித்தது அமெரிக்கா தான் என்பதை அவர் உறுதியாக நினைவூட்டினார்.
அதன் பின்னர் கனடா எடுத்துள்ள அனைத்து பொருளாதாரத் தற்காப்பு நடவடிக்கைகளும், கனடிய தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே செய்யப்பட்டவை எனவும் Mark Carney தெளிவுபடுத்தினார்.
அமெரிக்கத் தூதரகத்தின் பட்டியலில் உள்ளடங்கியுள்ள Ontario முதல்வர் Doug Ford, தனக்கு அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடுவதில் எந்த ஒரு விருப்பமும் இல்லை என கூறினார்.
