Alberta மாகாண இராணுவ பயிற்சி முகாம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி நான்கு இராணுவ உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில் மேலும் 39 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edmonton நகருக்கு கிழக்கே உள்ள CFB Wainwright கனடிய இராணுவ முகாமில் சனிக்கிழமை (17) மாலை இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் பலியான நான்கு கனடிய இராணுவ வீரர்கள் விவரங்களையும் அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
• Sgt. Morgan Wong
• Pte. Shaun Farrell
• Pte. Aidan Goulding
• Pte. Hayden Lykkemark
இராணுவ முகாமின் பயிற்சிப் பகுதியில் வீரர்கள் கையெறி குண்டு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தரைப்பகுதியில் இருந்த புற்களில் தீ பற்றியுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து பயிற்சி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்த போதும், தீ கட்டுக்குள் இருப்பதாக கருதி அவர்கள் பயிற்சியைத் தொடர அனுமதித்துள்ளனர்.
ஆனால் திடீரென பலத்த காற்று வீச ஆரம்பித்ததால் தீ கட்டுக்கடங்காமல் பரவியது.
காற்று வீசிய திசை மாறியதால் 30 முதல் 60 வினாடிகளுக்குள் தீ சுமார் ஒரு KM தூரத்திற்கு அதிவேகமாகப் பரவி அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களைச் சூழ்ந்துகொண்டது.
இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு Alberta மாகாணத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் முழுமையாக கணக்கிடப்பட்டு அவர்களுக்குத் தேவையான தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாகாண முதல்வர் Danielle Smith உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் Mark Carney, British மன்னர் King Charles III, மாகாண முதல்வர்கள் உட்பட பலரும் தொடர்ந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் தீ விபத்தினால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் தனது இரங்களில் கூறினார்.
இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், எவ்விதமான பயங்கரவாத நடவடிக்கைகளும் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை என கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த விபத்து ஒரு துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்துள்ளது எனவும், இதில் பயங்கரவாதச் சதி வேலைகள் எதுவும் இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு முன்னின்று செய்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து RCMP, இராணுவ உயர் அதிகாரிகள் இணைந்து விசாரணையை முன்னெடுக்கின்றனர்
